சென்னை: 'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று, இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல், இடியுடன் கூடிய பலத்த மழை, விடிய விடிய பெய்தது. சென்னையிலும் மழை கொட்டியது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியது.
அதிகபட்சமாக, சென்னை நகரில், 8 செ.மீ., மழை பதிவாகியது. கடந்த, 24 மணி நேரத்தில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், செம்பரம்பாக்கத்தில் 6, மகாபலிபுரம், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், பூந்தமல்லியில் 5, தாம்பரம், செங்குன்றம், கடலூரில் 4, மருங்காபுரி, வால்பாறை, அரக்கோணம், இலுப்பூர், அண்ணா பல்கலைக் கழகத்தில் 3, தோவாளை, சேலம், சோளிங்கர், புதுக்கோட்டை, திருமயம், கரம்பக்குடி, உத்தரமேரூர், காஞ்சிபுரம், டி.ஜி.பி., அலுவலகம், சென்னை விமான நிலையத்தில் 2, தாமரைப்பாக்கம், சோழவரம், பொன்னேரி, திருத்தணி, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பல இடங்களில், தலா, 1 செ.மீ., மழை பெய்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி குழந்தைவேலு கூறும்போது, 'கடந்த, 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. அடுத்த, 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், சென்னை நகரில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்' என்றார்.