| ADDED : ஜூலை 29, 2024 11:02 PM
கீழடி : கீழடி 10ம் கட்ட அகழாய்வு தொடங்கிய ஒரே மாதத்தில் தொல்லியல் துறை வரை பட தயாரிப்பில் ஈடுபட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.கீழடியில் இந்தாண்டு 10ம் கட்ட அகழாய்வு ஜனவரியில் துவங்காமல் ஜூன் 18ல் தொடங்கப்பட்டது. வழக்கமாக ஜனவரியில் தொடங்கி மழை காலத்திற்கு முன்னதாக செப்டம்பருடன் முடிவடையும், இந்தாண்டு ஆறு மாதம் கழித்தே அகழாய்வு பணிகள் அதுவும் குறைந்த 25 சென்ட் பரப்பளவில் பணிகள் தொடங்கின. கலெக்டர் ஆஷா அஜித் தொடக்க விழாவின் போது தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டதால் கூடுதல் தொழிலாளர்களை வைத்து அகழாய்வு விரைவு படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.ஆனால் தொடக்க நாளில் இருந்தே வெறும் 10 தொழிலாளர்களுடன் இரண்டு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு பாசிகள், கண்ணாடி மணிகள், ஆட்டக்காய், மீன் உருவ பானை ஓடுகள், தமிழி எழுத்து பானை ஓடு உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.கடந்த ஒரு வாரத்தில் கூடுதலாக இரு குழிகள் தோண்டப்பட்டன. 10 மீட்டர் ஆழம் வரை அகழாய்விற்காக குழிகள் தோண்டப்படும் நிலையில் 10ம் கட்ட அகழாய்வில் குறைந்த அளவு தரமே தோண்டப்பட்டதுடன் மேலும் இரு குழிகள் தோண்டப்பட்டன. அகழாய்வு நிறைவடைய ஒரு மாதம் இருக்கும் போது வரைபட பணி தொடங்கும், அகழாய்விற்கு தோண்டப்பட்ட குழிகளில் பொருட்கள் கிடைத்த இடம், துாரம், திசை, ஆழம் உள்ளிட்டவை வரைபடத்தில் குறிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படும், ஆனால் 10ம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்ட ஒரே மாதத்திலேயே வரைபட தயாரிப்பு பணியில் தொல்லியல் துறை ஈடுபட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 9ம் கட்ட அகழாய்வில் 834 பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் 10ம் கட்ட அகழாய்வில் அந்த அளவு பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தான் அகழாய்வு பணிகளை முடிக்க வசதியாக வரைபட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.