சென்னை:ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் 120 மாணவர்களுக்கு, மாதந்தோறும், 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும், முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் துவக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தகுதி தேர்வு நடத்தப்பட்டு, 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆராய்ச்சி படிப்பை தொடர, மாதம் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கினார். இந்த உதவித்தொகை தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளது. இதற்காக, 12.3 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வாயிலாக, 5.12 கோடி ரூபாய் செலவில், 10,000 சதுரடி பரப்பளவில், 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசர கால செயல்பாட்டு மையம், மாநில பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இங்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. பேரிடர் காலங்களில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்துவதற்கு, 70 இருக்கைகளுடன் கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. தடையற்ற மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, சாத்துார் ராமச்சந்திரன், தலைமை செயலர் முருகானந்தம் பங்கேற்றனர்.