சென்னை:நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி.,யில், 92,422 கட்டுமான வரைபடங்கள், கட்டட அனுமதி ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில், சென்னை பெருநகர் பகுதிக்கு வெளியில் உள்ள பகுதிகளில் கட்டட அனுமதி நடவடிக்கைகளை, டி.டி.சி.பி., முறைப்படுத்துகிறது. இதில், 10,000 சதுரடி வரையிலான கட்டடங்களுக்கு, உள்ளாட்சி அமைப்புகளே ஒப்புதல் வழங்குகின்றன. புதிதாக கட்டடம் கட்ட அனுமதி வழங்கும் பணிகள், ஒற்றைச் சாளர முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், இது தொடர்பான ஆவணங்கள் இயல்பாகவே டிஜிட்டல் முறைக்கு வந்து விடுகின்றன. ஆனால், பழைய கட்டட அனுமதி ஆவணங்கள் மேனுவல் பிரதிகளாகவே உள்ளன. கட்டுமான திட்ட அனுமதி தொடர்பான பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்ட நிலையில், பழைய வரைபடங்களை விரைவாக பயன்படுத்த முடிவதில்லை. இதுகுறித்து, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டிஏ.,வில், 1989 முதல் 2005 வரையிலான காலத்து கட்டட வரைபடங்கள், திட்ட அனுமதி ஆவணங்கள், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன.இதே போல, டி.டி.சி.பி.,யில், இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்ட அனுமதி வரைபடம், ஆணைகள் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 20.23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்நிதியை பயன்படுத்தி வரைபடங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் துவங்கின. இதன்படி, தற்போதைய நிலவரப்படி, 92,422 கட்டட வரைபடங்கள், ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.பழைய வீடு வாங்குவோர், அந்த கட்டடம் குறித்த உண்மை நிலவரம் அறியவும், புதிய கட்டட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யவும், இந்த வரைபடங்கள் பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.