| ADDED : மே 27, 2024 06:07 AM
சென்னை : தமிழகத்தில் வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க, தனியாக கூட்டுறவு பதிவாளர் உள்ளார். இவரது கண்காணிப்பில் தான், வீட்டு வசதி சங்கங்கள் செயல்படுகின்றன.இந்த நிர்வாக அமைப்பை, தற்போதைய காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அத்துடன் நகர்ப்புற பகுதிகளில், வாடகை வீட்டு வசதி சட்டம், அடுக்குமாடி குடியிருப்புகள் உரிமையாளர்கள் சட்டம் போன்றவற்றை அமல்படுத்துவதும் சவாலாக அமைந்துள்ளது.இதில், வாடகை வீட்டுவசதி சட்டம், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சட்டம் ஆகியவை, தற்போதைய தேவைக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட்டு உள்ளன. ஆனாலும், இதை அமல்படுத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து, கட்டுமான துறையினர் கூறியதாவது:தமிழகத்தில் வாடகை வீட்டுவசதி சட்டம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்டத்தை அமல்படுத்துவதில், பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. இந்த சட்டங்களை திருத்தும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன் துவங்கின. இந்த சட்டங்களை திருத்தி அமைத்தபின், இவற்றை அமல்படுத்த வசதியாக, கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், அதிகாரம் மிக்க வீட்டுவசதி இயக்கமாக உருவாக்கப்படும் என்று, தமிழக அரசு, 2022ல் அறிவித்தது. இருந்தும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு, இதில் விருப்பம் இல்லாததால், இரண்டு ஆண்டுகளாக அறிவிப்பாகவே உள்ளது.இதுபோன்ற அமைப்பை, அரசு எப்போது ஏற்படுத்தும் என்று காத்திருக்கிறோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தால், அடுக்குமாடி குடியிருப்பு உரிமைகள் சட்டம் தொடர்பாக நிலவும் பல்வேறு பிரச்னைகள் முடிவுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.