சென்னை:அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் இருந்து, 1977 மற்றும் 1980ல், அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வின்சென்ட்; அமைச்சராக, ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர். வின்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக உள்ளார். இந்த அறக்கட்டளை சார்பில், வில்லுக்குறி என்ற இடத்தில் பொறியியல் கல்லுாரி நடத்தப்படுகிறது.பொறியியல் கல்லுாரிக்காக, உரிய அனுமதி பெறாமல் தன் நிலத்தில் கட்டடம் கட்டியதாகவும், அதற்கு திருநெல்வேலி நகரமைப்பு துறை உதவி இயக்குனர் நாகராஜன் என்பவர் உடந்தையாக இருந்ததாகவும், வின்சென்டுக்கு எதிராக, ஜஸ்டின் என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகார் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வின்சென்ட் மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், அரசு வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, ''அனுமதியின்றி கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. ''வின்சென்டுக்கு சாதகமாக, நாகராஜன் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணைக்கு பின்னே, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது புலன் விசாரணை நடப்பதால், முடிவில் தான் சதி திட்டம் வெளிச்சத்துக்கு வரும்,'' என்றார்.இதையடுத்து, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், 'ஆவணங்களை பரிசீலித்ததில், மனுதாரருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருப்பது தெரிகிறது. அவற்றை புறக்கணித்து விட முடியாது. 'நியாயமான, சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள, புலன் விசாரணை அதிகாரியை அனுமதிக்க வேண்டும். எனவே, புலன் விசாரணையில் குறுக்கிட தேவையில்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.