செங்கல்பட்டு:''புதிய கொரோனா வைரஸ் கே.பி., - 2 தொற்றால், தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை; யாரும் பதற்றமடைய வேண்டாம்,'' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த படூர் - வீராணம் சாலையில், தனியார் மழலையர் பள்ளி திறப்பு விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பங்கேற்றார்.அப்போது, நிருபர்களிடம் அவர் பேசியதாவது:கடந்த 2019 இறுதியில், சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது. முதலில் ஆல்பா என அழைக்கப்பட்டு, பின் பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான் என, பல வகையில், அந்த வைரஸ் உருமாற்றம் பெற்றது.இதில் ஒமிக்ரான் வைரஸ், நுாற்றுக்கும் மேலாக உருமாற்றம் பெற்று, பல நாடுகளில் தொடர்ந்து வலம் வருகிறது. இந்நிலையில், தற்போது வந்துள்ள புதிய வகை கொரோனாவின் பெயர் கே.பி., - 2.சிங்கப்பூரில் அதிகளவில் பரவியுள்ள இது, 90 சதவீதத்திற்கு மேல் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத வைரஸ். இதனால் யாரும், பெரிய அளவில் பதற்றமடைய வேண்டாம்.இந்தியாவின் 11 மாநிலங்களில், இந்த வகை கொரோனா வைரசின் பாதிப்பு தென்படுகிறது. இருப்பினும், தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது.ஒரு மாதத்திற்கும் மேலாக, பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில், பாதிப்பு பதிவாகி வருகிறது. இருப்பினும், ஒரு பாதிப்பின் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.