சென்னை:பிரதமர் வீட்டு வசதி திட்ட மானியம் வழங்கியதில், 54.40 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை அடுத்த சோழவரத்தைச் சேர்ந்த எம்.எல்.தாமோதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:ஏழை எளியவர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தை, மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்துகிறது.சோழவரத்தில் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் முறைகேடு நடந்துள்ளது. கட்டப்படாத வீடுகளுக்கும், போலி பயனாளிகளுக்கும், தகுதியில்லாத நபர்களுக்கும் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், 54.40 லட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தை சட்டப்படி நடத்த, சோழவரம் வட்டார வளர்ச்சி அதிகாரி தவறி விட்டார். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, மனு அனுப்பினேன்.அரசு மானியத்தொகை 54.40 லட்சம் ரூபாயை முறைகேடு செய்தது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் அனுப்பிய புகாரில் விசாரணை நடப்பதாகவும், ஏற்கனவே 25 பேரிடம் விசாரிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வரும் 23க்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.