உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணிதத்தை மாற்றி யோசிக்கும் திட்டம் பட்டம் மாணவர் பதிப்பு சார்பில் துவக்கம்

கணிதத்தை மாற்றி யோசிக்கும் திட்டம் பட்டம் மாணவர் பதிப்பு சார்பில் துவக்கம்

சென்னை:'தினமலர்' நாளிதழின் பட்டம் மாணவர் பதிப்பு சார்பில், 'அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் த்ரூ மேத்தமேடிக்ஸ்' என அழைக்கப்படும், புதுமையான வழியில் கணிதத்தை கற்றுக் கொள்ளும் திட்டத்தின் துவக்க விழா, நேற்று மயிலாப்பூர் பி.எஸ்., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.திட்டத்தை துவக்கி வைத்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:இப்பள்ளியில், 1985ல் பிளஸ் 2 படித்தேன். தேர்வு எழுதும் அறைக்கு உள்ளே செல்லும் முன், அனைவரும் தங்களுக்கு நல்ல மதிப்பெண் பெற ஆசி வழங்கும்படி வேண்டி, இங்குள்ள விநாயகரை வழிபடுவோம்.

விரைவாக தீர்வு

அவர் தேர்வை சிறப்பாக எழுத பாதுகாப்பாக இருப்பார் என்பது நம்பிக்கை. நான் மற்ற பாடத் தேர்வுகளின் போது, 16 முறை விநாயகரை வலம் வந்தேன்; கணிதப்பாடத் தேர்வின் போதோ, 108 முறை வலம் வந்தேன்.ஐ.ஐ.டி.,க்கான ஜே.இ.இ., தேர்வாக இருக்கட்டும்; கணித ஒலிம்பியாட் போட்டியாக இருக்கட்டும்; எல்லாவற்றுக்கும் அடிப்படை, வித்தியாசமாக யோசிப்பது தான். உதாரணமாக, அதில் இடம் பெறும் ஒவ்வொரு கணக்கையும் போட, 5 அல்லது 6 நிமிடங்கள் ஆகலாம். ஆனால், கணிதத்தை மாற்றி யோசிக்கும் பயிற்சியை ஒவ்வொரு மாணவரும் எடுத்துக் கொண்டால், அதே கேள்விகளுக்கு இன்னும் விரைவாக தீர்வு காண முடியும்.இதே பள்ளியில், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு, கணித அறிஞர் சடகோபன் ராஜேஷ் முன்னர் வகுப்பு எடுத்தார். அதனால், அடுத்த இரண்டு வாரங்களில், மாணவர்களே பல சிக்கலான கணக்குகளுக்கும், மிகச் சுலபமாக தீர்வு கண்டனர்.

வழிகாட்டி நிகழ்ச்சி

பின்னர் ஒரு நாள், ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வுக்கு பயன்படும் ஒரு தடிமனான பாடநுாலை எடுத்து வந்து, அதிலிருந்து கேள்விகளை மாணவர்களிடம் கேட்டார். ஏற்கனவே அவர்கள், மாற்றி யோசிக்கும் பழக்கத்தைப் பெற்றிருந்ததால், அந்தக் கடினமான கணக்குகளை சட்டென போட்டு விட்டனர். அதுதான் கணிதத்தில் மாற்றி யோசிப்பதன் வாயிலாக கிடைக்கும் பலன்.இப்போதும், 'தினமலர்' நாளிதழ் நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சிகளுக்கு நான் வரும் போது, இந்த மாற்றி யோசிக்க வைக்கும் கணக்குகளையே, மேடையில் கேட்பேன். மாணவர்களுடைய யோசிக்கும் திறனை, வழக்கமான பாணியில் இருந்து முற்றிலுமமாற்ற வேண்டும். அதற்குத் தான் இந்தத் திட்டம் பயன்படுகிறது.'தினமலர்' மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழில், மூன்றாண்டுகளாக, 'மாற்றி யோசி' என்ற பக்கத்தை வழங்கி வருகிறோம். ஏராளமான மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர்.இப்போது, அதே மாணவர் பதிப்பு, 'பட்டம்' இதழ், இந்த புதுமையான வழியில் கணிதத்தை கற்றுக்கொள்ளும் திட்டத்தை பள்ளிகளுக்கு கொண்டு செல்வதன் வாயிலாக, மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. வருங்காலத்தில், நான் இன்னும் உயர் பதவியை அடையும் போது, இந்த, 'அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் த்ரூ மேத்தமேடிக்ஸ்' திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே மாற்ற முயற்சி செய்வேன். அந்த அளவுக்கு கணிதத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இந்தத் திட்டம் பயன் தரும்.இந்தத் திட்டத்தில் சேரும் மாணவர்கள், கண்டிப்பாக சான்றிதழ் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்று அங்கீகாரம் பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், 'தினமலர்' நாளிதழின் இணை இயக்குனர் ஆர்.லட்சுமிபதி, பள்ளி தாளாளர் பிரபாகரன், பள்ளி முதல்வர் ரேவதி பரமேஷ்வரன், கணித அறிஞர் சடகோபன் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

பயிற்சிக்கு கட்டணம் இல்லை

'அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் த்ரூ மேத்தமேடிக்ஸ்' திட்டத்தின் கீழ், நான்கு பிரிவுகள் உள்ளன. இவற்றில் 5, 7, 9, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் சேரலாம். தொடர்ந்து 10 வாரங்கள் நடைபெறும் இந்தப் பிரிவுகளில், வாரந்தோறும் ஒரு புதிய பாடமும், அதோடு பயிற்சிகள் மற்றும் சோதனைகள் வழங்கப்படும். பயிற்சியில் சேர கட்டணம் இல்லை. தேர்வுக்கு கட்டணம் உண்டு.பள்ளிகள் இத்திட்டத்தில் சேர, 98843 91342, 99443 09681, 97511 36644 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை