சென்னை:தமிழக அரசு அனுப்பிய, 'நீட்' நுழைவுத்தேர்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு, மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு முறையை கைவிடும் வகையில், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சட்டசபையில் நேற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கடந்த 2017ல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கிய பின், மருத்துவ படிப்பு, ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டது. ஏழை மாணவர்களால், இந்த தேர்வில் வெல்ல இயலாது. அதனால் தான், நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்து வருகிறோம். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரை அடிப்படையில், சட்டசபையில் 2021 செப்., 13ல், 'தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் - 2021' என்ற சட்ட முன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் அரங்கேறிய சம்பவங்கள், போட்டித் தேர்வுகளின் மீது, நம் மாணவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிலைகுலையச் செய்துள்ளன. தமிழகத்தின் குரல் இன்று, இந்தியாவின் குரலாக எதிரொலிப்பதை, அண்மை நிகழ்வுகள் காட்டுகின்றன.நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு பெற, நாம் எடுத்த முயற்சிகளை வெற்றி அடையச் செய்யவும், தேசிய அளவில் நீட் தேர்வை அறவே அகற்றவும் தேவையான முன்னெடுப்பாக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.அதைத் தொடர்ந்து, முதல்வர் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் அனுப்பினார். நீட் தேர்வு தொடர்பாக தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை போலவே, தங்கள் மாநிலத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள், ஆளும் மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார்.