உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.5 லட்சம் கோடி போதை பொருட்கள் மாயம் -உள்துறை விளக்கம் தர டில்லி ஐகோர்ட் உத்தரவு

ரூ.5 லட்சம் கோடி போதை பொருட்கள் மாயம் -உள்துறை விளக்கம் தர டில்லி ஐகோர்ட் உத்தரவு

மத்திய அரசின் கிடங்கில் இருந்து, 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்குமாறு டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த அரவிந்தாக் ஷன் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: பார்லிமென்டில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த தகவலில், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால், 2018ம் ஆண்டு, 19,691.15 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளுடன் ஒப்பிடும்போது, ஹெராயின் அளவில், 2,571.94 கிலோ அளவுக்கு மாறுபாடு இருக்கிறது. அதேபோல, 2018ம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில், 15,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவலை போதைப் பொருள் தடுப்பு பிரிவு உறுதி செய்யவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கும் தரவுகள் அனைத்தும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளுடன் ஒத்துப் போகவில்லை; முரண்படுகின்றன. இதன்படி பார்த்தால், 2018 முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலத்தில் பறிமுதலான போதைப் பொருட்களில், 70,772.54 கிலோ ஹெராயின் காணாமல் போய் உள்ளது; இதன் மதிப்பு, 5 லட்சம் கோடி ரூபாய். எனவே, மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவால் பறிமுதல் செய்யப்பட்டு, காணாமல் போயிருக்கும் போதைப் பொருட்கள் குறித்து, உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ''இது தொடர்பாக, நான்கு வாரங்களுக்குள் மத்திய உள்துறை அமைச்சகமும், நிதித்துறை அமைச்சகமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டுள்ளார்.--- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை