உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு மருத்துவமனைகளில் அவசியம் தனி போலீஸ் ஸ்டேஷன் இருக்கணும்: அன்புமணி வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளில் அவசியம் தனி போலீஸ் ஸ்டேஷன் இருக்கணும்: அன்புமணி வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை மருத்துவ மாணவி சிலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அங்கு இரு நாட்களுக்கு முன் நிகழ்ந்த வன்முறைகளும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான இந்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.

மோசமான நிலைமை

முதுநிலை பயிற்சி டாக்டருக்கு நேர்ந்த கொடூரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருக்கும் நிலையில், கடந்த புதன்கிழமை இரவில் டாக்டர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களை சூறையாடியதுடன், டாக்டர்களையும், போலீசாரையும் தாக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறை கும்பலைக் கலைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.

அச்சம்

உயிர்காக்கும் டாக்டர்கள் கடவுள்களைப் போன்றவர்கள். அவர்களை வணங்க வேண்டிய கைகளால் பாலியல் வன்கொடுமை, படுகொலை, கொலைவெறித் தாக்குதல்களை நடத்துபவர்கள் கண்டிப்பாக மனிதகுலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. பயிற்சி டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யார்? வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? என்பதை இதுவரை மேற்குவங்க போலீசாரும், மத்தியப் புலனாய்வுத்துறையும் கண்டுபிடிக்காதது டாக்டர்களிடையே அச்சத்தை அதிகரித்திருக்கிறது.

பாதுகாப்பில்லா இரவுப்பணி

டாக்டர்களின் பணி என்பது உன்னதமானது என்பதைக் கடந்து மிகவும் கொடுமையானது. முதுநிலை மருத்துவம் பயிலும் டாக்டர்கள் தொடர்ந்து 36 மணி நேரம் பயிற்சி டாக்டராக பணியாற்ற வேண்டும். இதுவே கடுமையான மன உளைச்சலையும், உடல் சோர்வையும் அளிக்கக் கூடிய செயலாகும். அவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்ய முடியாது. பரந்து விரிந்த அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைகளில் பல இடங்களுக்கு அவர்கள் சென்று நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் முதுநிலை மருத்துவம் பயிலக் கூடிய இன்றைய சூழலில் இரவு நேரப் பணிகள் என்பவை பாதுகாப்பற்றவையாகவே உள்ளன.

தூக்குத்தண்டனை

கோல்கட்டா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நிகழ்ந்த கொடூரங்கள் குறித்து சில நாட்களுக்கு பேசி விட்டு, வேறு பெரிய சிக்கல் வெடித்ததும் இதை மறந்து விடக் கூடாது. கோல்கட்டா பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். டாக்டர்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.

தனி போலீஸ் ஸ்டேஷன்

இவை அனைத்திற்கும் மேலாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பணியாற்றும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; வாய்ப்பிருந்தால் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கான பணி நேரத்தை இயன்ற அளவுக்கு குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ramesh Sargam
ஆக 17, 2024 20:28

காவல் நிலையம் உள்ளேயே குற்றங்கள் நடப்பது இவருக்கு தெரியவில்லை.


Senthoora
ஆக 17, 2024 17:54

இலங்கைக்கு போனபோது, முக்கிய நகரங்களில் இருக்கும் வைத்திய சாலைகளில் ஒரு போலீஸ் போஸ்ட் இருந்தது.


chennai sivakumar
ஆக 17, 2024 14:04

இருக்கும் காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறை. நீங்கள் வேறு


Senthoora
ஆக 17, 2024 17:51

என்ன, அதுக்கு வேலைக்கு ஆள் எடுத்த குறைந்த போகிடும், வேலை இல்லாமல் எதனை பட்டதாரிகள் இன்று பயித்தியமா அலையிறாங்க,


Premanathan Sambandam
ஆக 17, 2024 14:03

வீட்டுக்கு வீடு தனி காவல் நிலையம் கேட்க வேண்டியதுதானே? உங்க வீட்டு காசா பணமா ? அடிச்சு விடுங்க


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி