| ADDED : ஆக 20, 2024 01:46 AM
சென்னை: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:ரயில்வே பட்ஜெட்டில், தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும் போது, இது மிகக்குறைவு. புதிய பாதைகளுக்கு இடைக்கால ஒதுக்கீடாக, 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பட்ஜெட் ஒதுக்கீட்டில், வெறும் 301.3 கோடி ரூபாய் தான் தரப்பட்டு உள்ளது.இரட்டை பாதையாக்கல் திட்டத்திற்கு, இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் பட்ஜெட் ஒதுக்கீட்டில், 1,928.8 கோடி ரூபாய் உள்ளது. புதிய வழித்தட திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில், 674.8 கோடி ரூபாய் அளவிற்கு குறைக்கப்பட்டு உள்ளதால், திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - நகரி; அத்திப்பட்டு - புத்துார்; ஈரோடு - பழனி; சென்னை - கடலுார் - மாமல்லபுரம்; மதுரை - அருப்புக்கோட்டை - துாத்துக்குடி; ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி - இருங்காட்டுக்கோட்டை - ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஏழு முக்கிய திட்டங் கள் பாதிக்கப்படும்.இரட்டை பாதை திட்டங் களுக்கான நிதி ஒதுக்கீட்டை, 285.64 கோடி ரூபாய் அளவுக்கு குறைத்திருப்பது, விழுப்புரம் - திண்டுக்கல்; திருவள்ளூர் - அரக்கோணம் நான்காவது லேன்; ஓமலுார் - மேட்டூர் அணை; திருவனந்தபுரம் - கன்னியாகுமரி; மதுரை - மணியாச்சி - துாத்துக்குடி; மணியாச்சி - நாகர்கோவில்; சேலம் மேக்னசைட் சந்திப்பு - ஓமலுார்; காட்பாடி - விழுப்புரம்; சேலம் - கரூர் - திண்டுக்கல்; ஈரோடு - கரூர்; சென்னை கடற்கரை - எழும்பூர் போன்ற திட்டங்களை தாமதப்படுத்தும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம், மின்சார பஸ் சேவைகள், பெருந்திரள் துரித ரயில் போக்குவரத்து திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள், எவ்வித தாமதமுமின்றி விரைவுபடுத்தப்பட வேண்டும்.தமிழகத்தில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு, போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக, இந்த முக்கிய திட்டங்களை, மேலும் தாமதப்படுத்தக் கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.