உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில்துறையில் 3வது இடத்துக்கு முன்னேறிய தமிழகம்: பழனிசாமிக்கு ஸ்டாலின் பதில்

தொழில்துறையில் 3வது இடத்துக்கு முன்னேறிய தமிழகம்: பழனிசாமிக்கு ஸ்டாலின் பதில்

குன்றத்துார்:''தொழில்துறையில் 14வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என,'' என, காஞ்சிபுரத்தில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்தியாவே பாராட்டுகிறது

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில் குன்றத்துார் அடுத்த படப்பையில் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.அவர் பேசியதாவது:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும், தி.மு.க., ஆட்சியில் சீரான வளர்ச்சியடைந்துள்ளன. தி.மு.க.,வின் திட்டங்களை, இந்தியாவே பாராட்டுகிறது. பல மாநிலங்கள், நம் திட்டங்களை பின்பற்றுகின்றன. 'நான் முதல்வன்' திட்டத்தில் திறன் வளர்ப்பு பயிற்சி வாயிலாக 28 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கி உள்ளோம். மகளிருக்காக உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் போன்ற சிறப்பு திட்டங்கள், மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுபோன்று ஏராளமான திட்டங்கள் உள்ளன. இதையெல்லாம் சொன்னால் சாதனை விளக்கக் கூட்டமாக இது மாறிவிடும்.ஆனால், பழனிசாமி என்ன கேட்கிறார்? 'நான் ஒன்றிய அரசிடம் விருது வாங்கினேன். நீங்கள் ஏதாவது விருது வாங்கியிருக்கிறீர்களா' என்கிறார்.உங்களுக்கு விருது கொடுத்தது எதற்கு தெரியுமா, 'நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்' என்பதற்காகத் தான். நாங்கள் மக்களிடம் விருது வாங்கி இருக்கிறோம். ஜூன் 4ல் 'நாற்பதுக்கு நாற்பது' விருதும் கிடைக்கும்.

கொள்கை எதிரி

பதவி சுகத்திற்காக பா.ஜ.,விடம் கட்சியை அடகு வைத்த பழனிசாமி, பச்சைப் பொய்களை அவிழ்த்து விடுகிறார். பழனிசாமி ஆட்சியில் தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசையில், 14-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 'பா.ஜ., எங்கள் கொள்கை எதிரி' என, பழனிசாமி எங்காவது சொல்லியிருக்கிறாரா? பா.ஜ.,வை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என, அவரால் ஏன் திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை? அ.தி.மு.க.,வுடன் கள்ளக் கூட்டணியில் உள்ள பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படும். இதை நாங்கள் கூறவில்லை; 'நிதி ஆயோக்' தலைமை அதிகாரியாக இருக்கும் சுப்பிரமணியமே சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். இதற்காக, மோடி திட்டம் தீட்டுவதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

'இண்டியா' கூட்டணி

மோடி பிரசாரம் செய்தபோது, தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது என்றார். இப்போது மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும், தமிழகத்தில் பா.ஜ.,வால் வளர முடியாது.நாடு முழுதும் பா.ஜ., வென்றபோதும், தமிழக மக்கள் அவர்களை ஓடவிட்டனர். நாடு முழுதும் தோல்வி அடையப்போகும் இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு எப்படி ஓட்டளிப்பர்?சமூக நீதி காக்கும் தி.மு.க., தேர்தல் அறிக்கை போலவே, காங்கிரசும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் வகையில் காங்., தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. அதனாலேயே, 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவு பெருகியுள்ளது.திரும்ப சொல்கிறேன், அடுத்த முறையும் பா.ஜ., வந்தால், நாடு 200 ஆண்டுகளுக்கு பின் தள்ளப்படும். ஆர்.எஸ்.எஸ்., சட்டங்கள் நாட்டை ஆளும். பா.ஜ.,வுக்கு ஓட்டு அளிப்பது, தமிழக எதிரிகளுக்கு அளிக்கும் ஓட்டாகும். அ.தி.மு.க.,வுக்கு அளிக்கும் ஓட்டு, தமிழக துரோகிகளுக்கு அளிக்கும் ஓட்டாகும். அதை மனதில் வைத்து, உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஏப் 18, 2024 06:51

ஆமாம், நேற்று ஒரே நாளில் ரூபாய் கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது இதெல்லாம் வளர்ச்சிதானே மிஸ்டர் பழனிசாமி?


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை