உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அந்தந்த கால தேவைக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளை பயன்படுத்திய தமிழர்கள்!

அந்தந்த கால தேவைக்கு ஏற்ப வெவ்வேறு அளவுகளை பயன்படுத்திய தமிழர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தமிழர்கள், அந்தந்த காலத்தின் தேவைக்கு ஏற்ப, வெவ்வேறு அளவு முறைகளை பயன்படுத்தினர்,'' என, தஞ்சை தமிழ் பல்கலையின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவர் செல்வகுமார் பேசினார்.தமிழக தொல்லியல் துறை சார்பில், சென்னை கோட்டூர்புரம், தமிழ் இணைய கல்விக் கழகத்தில், மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.இதில், 'இடைக்கால தமிழகத்தில் நீட்டல் அளவை முறைமை' என்ற தலைப்பில் செல்வகுமார் பேசியதாவது:தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு நீட்டல் அளவை முறைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.அர்த்த சாஸ்திரம்சங்க காலத்தில் உள்ள கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் 38, 42, 45, 50 செ.மீ., அளவுகளுடன் உள்ளன. இவை, சாண் என்பதன் அடிப்படையாக இருக்கலாம். இரண்டு சாண், ஒரு முழம். இதன் அடிப்படையில் தான், அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டு கட்டடங்கள் எழுப்பப்பட்டன.பிற்காலத்தில் பல்லவர், சோழர் கோவில்கள், பள்ளிப்படைகளை கட்ட பயன்படுத்தப்பட்ட அடிப்படை கோலின் படம், அவற்றின் சுவர் பகுதியில், கூட்டல் குறி வடிவில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டது.சிற்பங்களை செய்யவும் நுண்ணிய அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. சில்ப சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் உள்ளிட்ட நுால்களில், இதற்கான குறிப்புகள் உள்ளன.நிலங்கள், வேலி என்ற அளவால் அளந்து, மகசூலின் ஐந்தில் ஒரு பகுதியை வரியாக வசூலித்துள்ளனர். வேலி என்பதன் 20ல் ஒரு பங்கை மா என்றும், ஒரு கோல் அளவுள்ள சதுரத்தை குழி என்றும் குறித்துள்ளனர். இதில், நஞ்சையை விட, புஞ்சைக்கான கோல், 4:5 என்ற விகிதத்தில் பெரிதாக இருந்தது.மாதவி நடனமாடிய அரங்கம், ஏழு கோல் அகலம், எட்டு கோல் நீளம், நான்கு கோல் உயரம் இருந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. அதேபோல், கண்ணகி சென்ற பாதையின் துாரம் காதம் என்ற அளவால் கூறப்பட்டுள்ளது. சோழர்களின் பிற்காலத்தில் எழுதப்பட்ட கணக்க திகாரத்திலும், பல்வேறு அளவு முறைகள் உள்ளன.ராஜராஜன் காலத்தில், நான்கு சிறு கோல்கள் சேர்த்து, உலகளந்தான் கோல் என மாற்றப்பட்டது. 16 ஜாண் அளவுள்ள அந்த கோலின் அளவுப்படி, கட்டடங்கள், குளங்கள், வீதிகள், பெருவழிகள் அமைக்கப்பட்டன. திருவாரூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட கோவில், குளங்கள், வீதிகள், இதுபோன்ற அளவுகளால் அமைக்கப்பட்டன.கொங்கு மண்டலத்தில், குறிப்பிட்ட அளவு விதையை, எவ்வளவு நிலத்தில் விதைக்க முடியுமோ, அந்த நிலத்துக்கு விதைப்பாடு என்ற அளவை பயன்படுத்தப்பட்டது.அதேபோல், பாடகம் உள்ளிட்ட பல்வேறு அளவுகளும் வழக்கில் இருந்தன. கடற்பயண துாரத்தை, பயண திசை, காற்றுடன் ஒப்பிட்டு, நாழிகை, நாள் எனும் கால அளவுடன் அளந்துள்ளனர்.

திருவெண்ணெய்நல்லுார்

பழங்கால அளவைகள் குறித்து, திருவாலங்காடு, சீயமங்கலம், லால்குடி, திருவெண்ணெய்நல்லுார், நங்கவரம், மேல்பாடி உள்ளிட்ட ஊர்க்கல்வெட்டுகள், நெடுநல்வாடை, கலித்தொகை உள்ளிட்ட இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.இதுகுறித்து, மேலும் கள ஆய்வுகளை செய்ய வேண்டும். அந்தக் கால தமிழர்கள், அந்தந்த காலத்தில், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு, தங்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளனர் என்பதை, அந்த கால பண்பாட்டு வரலாற்றுடன் ஒப்பிட்டு அறிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்வில், தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், முன்னாள் கல்வெட்டு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தொல்லியல் அலுவலர் பாக்கியலட்சுமி, பண்பாட்டு ஆய்வாளர் காந்திராஜன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஜூன் 30, 2024 07:18

மிகப்பழமையானது தமிழனின் நாகரீகம். ஐரோப்பாவுடன் கப்பல் வாணிபம் செய்து செல்வச்செழிப்புடன் திகழ்ந்து இருக்கிறது. தொன்மை என்றால் அவர்கள் சொல்வது இந்தியாவைதான். பல நாணயங்கள் அடையாளங்கள் அங்கெல்லாம் இன்னும் கூட உண்டு - நாம் தான் ஏதோ வெள்ளைக்காரன் வந்துதான் நாகரீகத்தை கற்றுக்கொடுத்தான் என்று. கடற்கரை ஓரங்களில் ஆய்வு செய்தாலே பல உண்மைகள் வெளிவரும். ஐரோப்பாவில் மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் உயரிய நாகரீகம், அரசாட்சி, போர்முறை, கப்பல் கட்டுதல் போன்றவை வெகு நேர்த்தியாக இருந்திருக்கிறது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி