புதுடில்லி : தேசிய நெடுஞ்சாலைகளில், 60 கி.மீ.,க்கு ஒரு சுங்கச் சாவடி முறை அமல்படுத்தப்படும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பல மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்த வீடியோ, சமீபத்தில் மீண்டும் சுற்றுக்கு வந்ததால், அந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு உள்ள மிகப் பெரிய சவால், சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்துவதுதான். இதற்காக நீண்ட வரிசையில், நீண்ட நேரம் காத்திருப்பதுடன், கட்டணம் அதிகமாக இருப்பதும் பெரும் பிரச்னையாக உள்ளது. காத்திருக்கும் நிலை
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் புதிய எளிமையான முறை நடைமுறைபடுத்தப்படும் என்று சமீபத்தில் தெரிவித்தார். ஜி.என்.எஸ்.எஸ்., எனப்படும் உலகளாவிய வழித்தட சாட்டிலைட் முறையின்படி, ஒரு வாகனம், ஜி.பி.எஸ்., முறையில் கண்காணிக்கப்படும். இதன்படி, அந்த குறிப்பிட்ட வாகனம், எந்த இடத்தில் இருந்து எந்த இடத்துக்கு சென்றது என்பது கண்டறியப்படும். அந்த தொலைவுக்கு மட்டும், அவர்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து சுங்கக் கட்டணம் நேரடியாக வசூலிக்கப்படும். சுங்கச் சாவடிகளே இருக்காது அல்லது அதில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.இது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதுடன், சுங்கக் கட்டண வசூலும் முறைப்படுத்தப்படும்.சோதனை முறையில்,இந்த நடைமுறை, கர்நாடகாவின் பெங்களூரு - மைசூரு இடையே, தேசிய நெடுஞ்சாலை எண் 275 மற்றும் ஹரியானாவின் பானிப்பட் - ஹிசார் இடையே அமல்படுத்தப்பட்டது. இது சிறந்தப் பலனை அளித்துள்ளதாக, ராஜ்யசபாவில் கடந்த மார்ச் மாதம் அளித்த பதிலில் கூறியிருந்தார்.இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில், 60 கி.மீ.,க்கு ஒரு சுங்கச் சாவடி முறை அறிமுகப்படுத்தப்படும் என, 2022 மார்ச்சில் அவர் அறிவித்தது தொடர்பான, வீடியோ சமூக வலை தளங்களில் மீண்டும் வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை எப்போது அமலுக்கு வரும் என, பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கட்டண விலக்கு
கடந்த, 2-008ல், என்.எச்., - 6--0 கி.மீ., விதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நெடுஞ்சாலைகளில், இரண்டு சுங்கச் சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், இது அமலுக்கு வரவில்லை. இதன் அடிப்படையிலேயே, 2022ல், அமைச்சர் நிதின் கட்கரி, 60 கி.மீ., இடைவெளிக்குள் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படாது என்று அறிவித்தார். மேலும், இந்த இடைவெளிக்கு உட்பட்டுள்ள உள்ளூர்வாசிகளுக்கு, ஆதார் அடிப்படையில் சுங்கக் கட்டண விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். வழக்குப்பதிவு
ஆனால், இவை இதுவரை அமலுக்கு வரவில்லை. நெடுஞ்சாலைகளில், 6-0 கி.மீ.,க்கு இடைப்பட்ட துாரத்தில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டு உள்ளன.மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் இணையதளத்தில், 60 கி.மீ., துார பயணத்துக்கு, குறிப்பிட்ட நிலையான தொகை கட்டணமாக வசூலிக்கப்படும். அதற்குக் குறைவான துாரம் பயணித்தால், அந்தத் தொலைவுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும் என, கூறப்பட்டுள்ளது.
விதிகள் என்ன சொல்கின்றன?
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின்தகவலின்படி, சுங்கக் கட்டணம்என்பது நெடுஞ்சாலையின் நீளத்தைப் பொறுத்தும், அதில் இடம்பெற்றுள்ள பாலங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.இந்தச் சாலைகளில் செல்லும் வாகனங்களின் அளவு, அதன் எடை, அதனால் சாலையில் ஏற்படக்கூடிய சேதம், அந்த வாகனம் வர்த்தகத்துக்கு அல்லது தனி பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறதா போன்றவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.என்.எச்.ஏ.ஐ., எனப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது:சுங்கச் சாவடியில் ஒரு வாகனத்துக்கான காத்திருப்பு நேரம், 1-0 வினாடிகள். அதற்கு மேல் காத்திருக்க நேரிட்டால், சுங்கக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு அனைத்து வகை வாகனங்களுக்கும், பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த, 2021, பிப்.,ல் இது அமலுக்கு வந்தது. கட்டண வசூலை மேம்படுத்தவும், காத்திருப்பு நேரத்தை குறைக்கவும் இது கட்டாயமாக்கப்பட்டது.இதன் அடுத்தக்கட்டமாக, ஒரு வாகனத்துக்கு, ஒரு பாஸ்டேக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்தது.சுங்கச் சாவடிகளில், அதிகபட்சம், 100 மீட்டர் துாரத்துக்கு மட்டுமே வாகனங்கள் காத்திருக்கலாம். இதைக் குறிப்பிடும் வகையில், மஞ்சள் நிறத்தில் கோடு போட்டிருக்க வேண்டும். அந்தத் துாரத்தைத் தாண்டி காத்திருக்க நேரிட்டால், கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் செல்லலாம்.இவ்வாறு விதிகள் கூறுகின்றன.---
வழிகாட்டுதல் வரவில்லை
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், 2008ம் ஆண்டு சுங்கச்சாவடி விதிகளின்படி, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், 60 கி.மீ., எல்லைக்குள் வசிப்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம் என்ற, எந்த வழிகாட்டுதலையும் மத்திய அரசு வழங்கவில்லை. எனவே, வழக்கமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.- ரவீந்தரராவ்,திட்ட இயக்குனர், சென்னை புறவழிச்சாலை