சென்னை: மலைப்பகுதிகளில் உள்ள அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்த, கூடுதலாக நான்கு மாதம் அவகாசம் அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு, 2019ல் முடிந்தது. இதில், மலைப்பகுதிகளில் உள்ள மனைகள் சேர்க்கப்படாததால், 16 மாவட்டங்களை சேர்ந்த, 43 தாலுகாக்களில், 597 கிராமங்களில் உள்ள அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மலைப்பகுதி மனைகளை வரன்முறை செய்ய, தனியாக ஒரு திட்டம், 2020 மார்ச், 30ல் அறிவிக்கப்பட்டது. மனை வரன்முறைக்கு விண்ணப்பிக்க, ஆறு மாதம் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டது. பின், இந்த அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. நீட்டிக்கப்பட்ட அவகாசம், 2021 நவம்பரில் முடிந்தது. இந்த அவகாசத்தை தவறவிட்ட மனை உரிமையாளர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, அங்கீகாரமில்லாத மலைப்பகுதி மனைகளை வரன்முறை செய்வதற்கான அவகாசம் தர, 18 மாதங்களாக இருந்த விதியை, 56 மாதங்கள் என திருத்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க, இந்தாண்டு நவம்பர் இறுதி வரை அவகாசம் கிடைக்கிறது. அதாவது, இன்னும் நான்கு மாதங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.இதற்கான உத்தரவை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார். பொது மக்கள், tnlayouthillareareg.inஎன்ற இணையதளம் வாயிலாக, மனை வரன்முறை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.