உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகர்ப்புற உள்ளாட்சி பணி விதிகளில் மாற்றம் ஆலோசித்து முடிவெடுக்க சங்கங்களுக்கு அழைப்பு

நகர்ப்புற உள்ளாட்சி பணி விதிகளில் மாற்றம் ஆலோசித்து முடிவெடுக்க சங்கங்களுக்கு அழைப்பு

சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டத்தின் கீழ், பணியமைப்பு விதிகளில் திருத்தங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்க வேண்டியவை குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தனித்தனியே சட்டம் மற்றும் விதிகள் இருந்தன. மாநகராட்சி ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றாலும், அந்த மாநகராட்சிக்கு உள்ளேயே பணியாற்றி வந்தனர்.

திருத்தம்

நகராட்சி ஊழியர்கள் மண்டல அளவிலான பதவி உயர்வின் போது, இடமாற்றம் செய்யப்பட்டனர். பணிமூப்பு, அவர்கள் பணியாற்றும் உள்ளாட்சி அளவில் கடைப்பிடிக்கப் பட்டது.இதில் மாற்றம் செய்வதற்காக, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகள் வகுக்கப்பட்டன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி ஊழியர்களுக்கும், மாநில அளவில் பணிமூப்பு கடைப்பிடிப்பது; ஊழியர்களை மாநில அளவில் இடமாற்றம் செய்வது என்பது உட்பட, பல திருத்தங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

சில விதிகளுக்கு, மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே, பணியமைப்பு விதிகளில் திருத்தங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்க வேண்டியவை குறித்து, ஆலோசித்து முடிவெடுக்க அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம், வரும் 23ம் தேதி காலை, 11:00 மணிக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனரக கட்டடத்தில் நடக்கும் என, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு அறிவித்துள்ளார். இதில் பங்கேற்க, அனைத்து மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் சங்க கூட்டமைப்புகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.

என்ன செய்யலாம்?

மாநகராட்சியை பொறுத்தவரை, நிர்வாக ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றாலும், அங்கேயே பணியாற்றி வந்தனர். மாநகராட்சி அளவிலேயே பணிமூப்பு கடைப்பிடிக்கப்பட்டது. புதிய விதிகளின்படி, மாநில அளவில் பணிமூப்பு கடைப்பிடிக்கப்படும். இளநிலை உதவியாளர், உதவியாளராக பதவி உயர்வு பெறும்போது, மாநிலத்தில் எந்த மாநகராட்சிக்கும் மாற்றப்பட புதிய விதி வழிவகுக்கிறது. உயர் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டால் பாதிப்பு இருக்காது. கடைநிலை ஊழியர்களை இடமாற்றம் செய்தால், கடுமையாக பாதிக்கப்படுவர்.இளநிலை உதவியாளர் பதவிக்கு, குறைந்த பட்ச கல்வித்தகுதி பிளஸ் 2 என்பது, 2021ம் ஆண்டு 10ம் வகுப்பாக மாற்றப்பட்டது. தற்போது, உதவியாளர் பணியில் இருந்து பதவி உயர்வு பெற பட்டப்படிப்பு அவசியம் என்று புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள ஊழியர்களில் பெரும்பாலானோர் பதவி உயர்வு பெற முடியாத நிலை உள்ளது. எனவே, இவற்றில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட சில திருத்தங்களை கூறி உள்ளோம். இதுகுறித்து, 23ம் தேதி கூட்டத்தில் வலியுறுத்த உள்ளோம்.- - - ஆர்.சுப்பிரமணியன்தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்