உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழிகாட்டி மதிப்பு குறித்து மக்களிடம் கருத்து கேட்பு ஏன்?

வழிகாட்டி மதிப்பு குறித்து மக்களிடம் கருத்து கேட்பு ஏன்?

சென்னை:நில வழிகாட்டி மதிப்பு குறித்து, அவசரகதியில் பொது மக்களிடம் கருத்து கேட்கும் பணியில், சார் - பதிவாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.தமிழகத்தில், 2012ல் அறிவிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு மீண்டும் அமல்படுத்தப்படும் என பதிவுத்துறை, 2023ல் அறிவித்தது. இதனால், 2012ல் நிலவிய வழிகாட்டி மதிப்புடன், சமீபத்திய உயர் மதிப்புகளும் சேர்த்து, பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கட்டுமான துறையினர் தொடர்ந்த வழக்கில், இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மீறி, சார் - பதிவாளர்கள், அந்த சுற்றறிக்கைபடி பத்திரப்பதிவு செய்ய வற்புறுத்துகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட ஒருவர், திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் சார் - பதிவாளர் மீது, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதை விசாரித்த நீதிமன்றம், அந்த சார் - பதிவாளர் மீது அவமதிப்பு வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சூழலில், பதிவுத்துறையினர் அவசர கருத்து கேட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: பேரம்பாக்கம் சார் - பதிவாளர் தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவு பதிவுத்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. வழிகாட்டி மதிப்பு சுற்றறிக்கை ரத்து வழக்கில் மேல்முறையீடு செய்திருப்பதால், புதிய சுற்றறிக்கையை, ஐ.ஜி., பிறப்பிக்கவில்லை. இந்நிலையில், ஒவ்வொரு பகுதியிலும், இணையதளத்தில் உள்ள வழிகாட்டி மதிப்பு சரியாக உள்ளது என்று, உள்ளூர் மக்களிடம் எழுத்துப்பூர்வ வாக்குமூலம் பெற, மேலதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, பொது மக்களிடம் அவசரகதியில் கருத்து பெற்று வருகிறோம். இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்