| ADDED : நவ 20, 2025 01:21 AM
சென்னை: தமிழகத்தில் 1.11 கோடி வாக்காளர்களின் விவரங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, வாக்காளர்களின் வீடுகளுக்கு, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சென்று, கணக்கெடுப்பு படிவங்களை வினியோகம் செய்தனர். நேற்று வரை, 6.10 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட 1.11 கோடி படிவங்கள் பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைனில் பதிவு செய்வதற்கான சர்வர் முறையாக இயங்காததால், பணிகள் தாமதமாகி வருகின்றன. இதனால், குறித்த காலத்திற்குள் பணியை முடிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.