மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷனில், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, 56 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பணி, 4.5 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு படையினர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
மதுரை ரயில்வே ஸ்டேஷனில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள், அவர்களது உடமைகள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். சமூக விரோதிகள், பயங்கரவாத செயல்கள் நிகழாதவாறு கண்காணிக்க, ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம், பாதுகாப்பு படையினர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
கோட்ட கூடுதல் மேலாளர் வெங்கடசுப்ரமணியன் கூறியதாவது: மெயின் நுழைவு வாயில், முன்பதிவு மையங்கள், பிளாட்பாரங்கள், பயணிகள் ஓய்வறைகள் உட்பட, பயணிகள் நடமாட்டம் மிகுந்த, 56 இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. இவை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும். இங்குள்ள திரையில், வீடியோவில் பதிவாவதை அறிய முடியும். கேமிராக்கள் இந்தாண்டு இறுதிக்குள், செயல்பட துவங்கும். ஆன்-லைன் மூலம் பயணிகள், ஓய்வறைகளை பதிவு செய்யும் முறையில், மதுரை ஸ்டேஷன் இணைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள, 22 பயணிகள் ஓய்வறைகளுக்கு, வெளிமாநிலங்களில் இருந்து ஆன்-லைன் மூலம் பதிவு செய்யும் பணி, ஒரு வாரமாக நடக்கிறது. ராமேஸ்வரம், நெல்லை ஸ்டேஷன்களையும், இத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், வெளியிடங்களில் அதிக கட்டணத்தை செலுத்தி பயணிகள் அறை எடுப்பது தவிர்க்கப்படும்.
ஸ்டேஷனில், 7 கோடி ரூபாயில் சீரமைப்பு பணி, புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. மூன்று இடங்களில் எஸ்கலேட்டர்கள், இந்தாண்டு இறுதிக்குள் அமைக்கப்படும். இவ்வாறு வெங்கடசுப்ரமணியன் கூறினார்.