திட்டத் துவக்க விழாவுக்காக வாங்கப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 9.12 லட்சம் மடிக்கணினிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி, அடுத்த மாதம், 4ம் தேதி திறக்கப்படுகிறது.
தேவையான எச்சரிக்கை, தேவைக்கு அதிகமான வசதி. இது தான், மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும், 'விலையில்லா' மடிக்கணினியின் அடிப்படை கொள்கை. மடிக்கணினிக்கான வன்பொருள் தேர்விலும், மென்பொருள் உள்ளீடுகளிலும் செலுத்தப்பட்டுள்ள கவனம் வியப்பளிக்கிறது.
திரையின் அளவு, 14 அங்குலம், எடை, 2.700 கிலோ கிராம், 2 ஜிபி ராம், 320 ஜிபி வன்தகடு உள்ளிட்டவை, நிபந்தனையாக்கப்பட்டுள்ளன. இவை தவிர, டி.வி.டி., பதிவி (டி.வி.டி., ரைட்டர்), நிழற்படக் கருவி (கேமரா), இணையம் (மோடம்) போன்றவையும் இருக்க வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டது. ஆனால், இதில் இரு சிக்கல்கள் எழுந்தன.
முதலாவதாக, மடிக்கணினியின் அடக்க விலை அதிகமானது. இரண்டாவதாக, குறுந்தகடு, நிழற்படக் கருவி மற்றும் இணையதளப் பயன்பாடுகளால், மாணவர்களின் கவனம் திசை திரும்பும் அபாயமும் இருந்தது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி இடம்பெற்றது. இதன் எதிரொலியாக, மடிக்கணினியில் இம்மூன்றும் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது.
இதேபோல, மடிக்கணினியில் உள்ள மென்பொருள்களிலும் ஏராளமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 'விண்டோஸ்' 7 மற்றும் லினக்சின், 'பாஸ்' ஆகிய இயக்குமுறைகள் (ஆபரேட்டிங் சிஸ்டம்) உள்ளன. விண்டோஸ் 7 மூலம், டாம் 99 மற்றும் யுனிகோடு எழுத்துருக்கள் (பான்ட்) கொடுக்கப்பட்டுள்ளன. பாரதி, இளங்கோ, கம்பன் உள்ளிட்ட எழுத்துருக்களும் உள்ளன.
விசைப்பலகை ஆங்கிலத்தில் தான் உள்ளது. ஆனால், திரையில் தமிழ் விசைப்பலகை தெரியும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. லினக்சின், 'பாஸ்' மூலம், ஆங்கில எழுத்துக்களைத் தட்டினால் தமிழ் எழுத்துக்களைத் தரும் விசைப்பலகையும் தரப்பட்டுள்ளது.
இது தவிரவும், கணினி அறிவியல் பாடத்துக்குத் தேவையான அத்தனையும் இதில் அடங்கியுள்ளன. மடிக்கணினியில் உள்ள வசதியின் மூலம், புதிய மென்பொருள் வடிவமைப்பதற்கே கூட கற்றுக்கொள்ள முடியும். உரையுடன் கூடிய திருக்குறள் உள்ளது. ஆங்கிலம் - தமிழ் அகராதி இருக்கிறது. புரியாத சொற்களுக்கு எந்நேரம் வேண்டுமானாலும் பொருள் தெரிந்து கொள்ளலாம்.
பொறியியல் மாணவர்களுக்கான கலைச்சொல் அகராதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களின் அனைத்து பாடங்களும் (30க்கும் மேற்பட்டவை) மடிக்கணினியிலேயே உள்ளன. இதன் மூலம், வகுப்புகளுக்கு புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.
இவை அனைத்தும், தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் வழங்கப்பட்டதால், அடக்க விலையில் ஒரு காசு கூட அதிகரிக்கவில்லை. இதுகுறித்து, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழக அரசின் இத்திட்டத்தின் மூலம், படித்து, வேலைக்குச் சென்று, 25 வயதில் கிடைக்கக் கூடிய ஒரு விஷயம், மாணவர்களுக்கு சின்ன வயதிலேயே கிடைத்துவிடுகிறது. நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மாணவர்களோடு போட்டி போடவும், சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியவும் நேரும் சந்தர்ப்பங்களில், அவற்றை சுலபமாக எதிர்கொள்ள, இந்த மடிக்கணினி அனுபவம் அவர்களுக்கு பெரிதும் உதவும்' என்றார்.
வினியோகம்: இந்த கல்வியாண்டுக்குள், 9.12 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. கடந்த 15ம் தேதி, திட்டத்தின் துவக்க விழாவுக்காக, முதல்கட்டமாக, 6,875 மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இவை, பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம், இதுவரை, 4,396 மடிக்கணினிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
சட்டசபை இடைத்தேர்தல் காரணமாக, திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஒரு பள்ளிக்கு, 121 மடிக்கணினிகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, 2,479 மடிக்கணினிகள் காத்திருக்கின்றன.
புதிய டெண்டர்: ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 9.12 லட்சம் மடிக்கணினிக்கான டெண்டர், அடுத்த மாதம், 4ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதில், எச்.பி., ஈஷர் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மடிக்கணினி தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முதல்கட்டத்தில் இந்த மடிக்கணினிகள், 14 ஆயிரத்து, 40 ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டன. இந்த டெண்டரில் பெரியளவில் கொள்முதல் மேற்கொள்ளப்பட இருப்பதால், இதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும், 4ம் தேதி, விண்ணப்பித்துள்ள நிறுவனங்களின் தொழில்நுட்பத் தகுதிகள் பார்க்கப்படும். தொடர்ந்து, அவற்றின் விலைப்புள்ளி எடுத்துக் கொள்ளப்படும். மிகக் குறைவான விலை கொடுத்துள்ள நிறுவனத்தின் விலைக்கே, மற்ற நிறுவனங்களும் வழங்கும் விதமாக, அவற்றை அழைத்துப் பேசப்படும். நிறுவனங்களின் உற்பத்தித் திறனுக்கேற்ப, ஒன்பது லட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் பிரித்து வழங்கப்படும்.
- ஆர்.ரங்கராஜ் பாண்டே -