சென்னை: காட்டு யானைகளை, 'கொம்பன், படையப்பா' என்று பெயரிடாமல், குறியீட்டு எண்கள் அடிப்படையில் அடையாளப்படுத்தும் பணிகளை, தமிழக வனத்துறை துவக்கி உள்ளது. தமிழகத்தில், 3,170 யானைகள் இருப்பதாக, வனத்துறை கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நடப்பு ஆண்டில் மட்டும், 69 யானைகள் இறந்துஉள்ளன. சமீப காலமாக, ஊருக்குள் வரும் காட்டு யானைகளுக்கு, 'அரிசி கொம்பன், படையப்பா, பாகுபலி, ரிவால்டோ' என, உள்ளூர் மக்கள் பெயரிடுகின்றனர். இதுபோன்ற பெயர்களால், அந்த யானைகள் குறித்த எதிர்மறை எண்ணம், மக்கள் மத்தியில் ஏற்படுகிறது. இது குறித்து, 'ஓசை' என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் ஓசை காளிதாசன் கூறியதாவது: குறிப்பிட்ட சில பகுதிகளில், ஊருக்குள் திரும்ப திரும்ப வரும் யானைகளுக்கு, உள்ளூர் மக்கள் இதுபோன்ற பெயர்களை சூட்டுகின்றனர். இந்த பெயர்களை பிரபலப்படுத்தும்போது, அது அந்த யானைகள் குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்தும். எனவே, வனப்பகுதிகளில் யானைகள், புலிகள் ஆகியவற்றை, குறியீட்டு எண்கள் அடிப்படையில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதால், சம்பந்தப்பட்ட யானைகள் குறித்த எதிர்மறை கருத்துகள் உருவாவதை தடுக்க முடியும். அறிவியல்பூர்வமாக இதற்கான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இதற்கான பணிகளை, வனத்துறை துவக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானைகளுக்கு உள்ளூர் மக்கள் குறிப்பிடும் பெயர்களை பின்பற்றாமல், 'சி 12, சி 14' என்பது போன்ற குறியீட்டு எண்களை பயன்படுத்த அறிவுறுத்தி இருக்கிறோம். நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சட்ட ரீதியான வழிகாட்டுதல்கள் அடிப்படையில், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையி லேயே, அனைத்து தகவல் களையும் பரிமாற, வனத் துறையின் பல்வேறு நிலை அலுவலர்கள் அறிவுறுத்தப் பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.