| ADDED : ஆக 18, 2011 07:17 PM
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது, நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியது குறித்து, புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர். ராமேஸ்வரத்திலிருந்து நேற்று , 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள், மீன்பிடிக்கச்சென்றனர். வழக்கம் போல் கச்சத்தீவு கடல் பகுதிக்கு சென்ற இவர்களை இடையில் வழிமறித்த இலங்கை கடற்படையினர், மீன்பிடி வலைகளை வெட்டிவிட்டு விரட்டியடித்தனர். வலைகள் சேதமடைந்த நிலையில், இரவு 8 மணி வரை இலங்கை கடற்படையினரின் நடவடிக்கை தொடர்ந்ததால், வேறு வழியில்லாமல் போக்குகாட்டிவிட்டு, நள்ளிரவுக்குமேல் மீன் பிடித்து விட்டு மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர். இதனிடையே இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் கரைவரை சென்று, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மீன்வளத்தை அழிக்கும், இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி, மீன்பிடிப்பில் சில மீனவர்கள் ஈடுபட்டனர். இவர்களின் படகுகள் மீது, இலங்கை மீனவர்கள் நள்ளிரவில் வெடிகுண்டுகளை வீசியதாகவும், உயிருக்கு பயந்து உடனடியாக திரும்பி ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு தப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புலனாய்வு துறையினர் விசாரிக்கின்றனர்.