கோவை: ''பத்து தொகுதிகளில் தோல்வியை கொடுத்த கோவை மக்களுக்கு, மெட்ரோ கிடைத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தி.மு.க., அரசு மெட்ரோ ரயில் விவகாரத்தில் கபட நாடகம் ஆடுகிறது,'' என பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி குற்றஞ்சாட்டினார். அவர் அளித்த பேட்டி ; கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக தி.மு.க.,கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. சாத்தியமே இல்லாத ஒரு விரிவான திட்ட அறிக்கையை அளித்து விட்டு மத்திய அரசு மீதும் ,பிரதமர் மீதும் பொய் குற்றச்சாட்டை சுமத்தி, மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் தி.மு.க., இறங்கியுள் ளது. 'கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து தமிழகத்தை வஞ்சிக்கிறது' என்று சொல்லி போராட்டம் நடத்தியுள்ளது. தி.மு.க., இந்த மோசடியில் தி.மு.க., கூட்டணி கட்சிகளும் சேர்ந்துள்ளன. ஒரு மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் வர வேண்டும் என்றால், 2017ம் ஆண்டு நடைமுறையின் படி சில வரன் முறைகள் உண்டு. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்போது எவ்வளவு இடம் வேண்டும் என்பது பற்றி தெளிவாக குறிப்பிட வேண்டும். ஆனால், அது குறித்து எதையும் தெளிவாக குறிப்பிடாமல், மதுரை - கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவதற்காக, திட்ட அறிக்கையை தமிழக அரசு அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 22 மீட்டர் அகலம் கொண்ட பாதை அமைக்க வேண்டும் என்று உள்ள நிலையில், ஏழு முதல் 12 மீட்டர் மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். சரியாக ஹோம் ஒர்க் செய்யாமல் திட்டத்தை வாங்கி வர வேண்டும் என்று நினைக்கின்றனர். தேர்தல் நேரத்தில் பிரதமருக்கு கருப்பு கொடி காண்பிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. தவறான தகவல்களாலேயே திட்டம் மறுக்கப்பட்டிருக்கிறதே தவிர, முறையான திட்ட அறிக்கை அளித்தால், திட்டத்துக்கு அனுமதி கிடைக்கும். இனி தி.மு.க., ஆட்சி இருக்கப் போவதில்லை. அதனால், அவர்களால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை. வரும் 2 026 சட்டசபைத் தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க., தலைமையில் ஆட்சி அமையும். அதன்பின், எளிதாக திட்டத்தை நிறைவேற்றுவோம். இவ்வாறு அவர் கூறி னார்.