சென்னை : போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைதாகியுள்ள நிலையில், அவர் மேற்கொண்ட போலி பாஸ்போர்ட் தயாரிப்பு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க நிதியுதவி அளித்தது குறித்து, தேசிய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ., விசாரித்துவருகிறது.அதேநேரத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்துள்ளனர். தி.மு.க.,வில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர் ஜாபர் சாதிக், 36. இவர், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டுள்ளார். இவரை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் டில்லி சிறப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ஏழு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.ரூ.5,250 கோடி
இது தொடர்பாக, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: சென்னை பர்மா பஜாரில் திருட்டு 'சிடி' விற்று வந்த ஜாபர் சாதிக், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக மாறியுள்ளார்.அது எப்படி என அவரிடம் விசாரித்த போது, 'என் தொழில் சாம்ராஜ்யத்திற்கு பின்னணியில் ஏராளமானவர்கள் உள்ளனர். மூன்று ஆண்டுகளில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு, 45 முறை போதைப்பொருள் கடத்தி உள்ளேன். இதன் வாயிலாக, 5,250 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளேன்.'இந்தப் பணத்தை, சினிமா படங்கள் தயாரிப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் நடத்த முதலீடு செய்துள்ளேன். அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்ததுடன், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்கவும் நிதியுதவி வழங்கியுள்ளேன்' என்று கூறினார். கைதான போது, ஜாபர் சாதிக்கின் சட்டைப் பையில், தி.மு.க., உறுப்பினர் அட்டை, எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநில பொதுச்செயலர் உமர் பாரூக் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் மதினா மஸ்ஜித் ஆகியோரின் விசிட்டிங் கார்டுகள் இருந்தன.அவர்கள் உடனான தொடர்பு குறித்து கேட்ட போது, ஜாபர் சாதிக் மேலும் கூறியதாவது: என் சகோதரர் முகமது சலீம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மிக முக்கிய பொறுப்பில் இருந்தார். அவர் வாயிலாக, உமர் பாரூக்கின் விசிட்டிங் கார்டு கிடைத்தது. மற்றொரு சகோதரர் மைதீன், சினிமா நடிகராக உள்ளார். அவர் வாயிலாக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா நடிகர், நடிகையருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டேன். திரைப்பட இயக்குனர் அமீருக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அமீர் இயக்கத்தில், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை தயாரித்து வருகிறேன். அமீர் வாயிலாக, முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் தொடர்பும் கிடைத்தது. சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு போதைப்பொருளும், 'சப்ளை' செய்துள்ளேன்.வழக்கறிஞர் ஸ்டிக்கர்
நான் போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடுவது, என்னுடன் மிக நெருக்கமாக இருந்த சினிமா பிரபலங்களுக்கு தெரியும். எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. அரசியல் கட்சி ஒன்றில் பொறுப்பு வாங்க, முக்கிய புள்ளி ஒருவரிடம், 1 கோடி ரூபாய் கொடுத்தேன்; அவர் ஏமாற்றி விட்டார்.அதனால், அக்கட்சியில் என்னால் சேர முடியவில்லை. சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிலர் என்னை ரகசியமாக சந்தித்து உள்ளனர். அவர்கள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.அவர்களுக்கு கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துள்ளேன். தமிழகத்தில் போதைப்பொருள் கடத்த, சொகுசு காரை பயன்படுத்தினேன். அந்தக் காரில், வழக்கறிஞர் என, ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வேன்.கட்சிக்கொடி கட்சியுள்ளதுடன், என் பொறுப்பு குறித்து ஸ்டிக்கரும் ஒட்டி இருப்பதால், போலீசார் சோதனையிலிருந்து அடிக்கடி தப்பி வந்தேன். என்னிடம் எட்டுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்கள் உள்ளன. இவ்வாறு ஜாபர் சாதிக் கூறினார்.ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குளை ஆய்வு செய்து, யார், யாருக்கு எவ்வளவு தொகை அனுப்பி உள்ளார் என்ற முழு தகவலையும் திரட்டி உள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்த அத்தனை பேரும் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவர். ஜாபர் சாதிக் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி செய்தது மற்றும் போலி பாஸ்போர்ட் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.வங்கி கணக்கு ஆய்வு
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது.கட்சி மாநாடுக்கு, அறக்கட்டளைக்கு அனுப்புவது போல, ஜாபர் சாதிக் வங்கிக் கணக்கில் இருந்து, முகமது சலீமுக்கு பணம் அனுப்பப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.