| ADDED : மார் 11, 2024 04:48 AM
அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்து, வி.சி., துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, நேற்று வெளியிட்ட அறிக்கை: என் அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை குறித்த செய்தி, ஊடகங்களில் பரவலாக வெளியாகி இருந்தது. சோதனை, 9ம் தேதி காலை துவங்கி, 10ம் தேதி காலை வரை ஒரு நாள் நடந்தது. பொது வாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்க வேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதன் அடிப்படையில், சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும், என் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.இதற்கிடையே, சமூக வலைதளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதுாறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை. அதனால், வழியில் பயமில்லை. அம்பேத்கர், ஈ.வெ.ரா., ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழி நின்று உறுதியோடு என் பயணம் தொடரும்.இவ்வாறு கூறியுள்ளார்.