| ADDED : டிச 06, 2025 01:40 PM
புதுடில்லி: இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு ஜெய்சங்கர் அளித்த பேட்டி: உலகில் பரபரப்பான சூழலில் ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு நிலையாக இருக்கிறது. பிரேசிலுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய உர இறக்குமதி நாடாக இந்தியா இருக்கிறது. இந்த துறையில் கூட்டு முயற்சியை உருவாக்க நாங்கள், ரஷ்யா உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். புடினின் இந்திய பயணம் உறவை எவ்வாறு வளர்ப்பது என்பதில் மிக முக்கியமான பங்கு வகித்தது. அதிபர் புடின் ஒரு பெரிய வணிகக் குழுவுடன் வந்தார். அது மிகவும் வித்தியாசமான பயணமாக அமைந்தது. கடந்த 70-80 ஆண்டுகளில் உலகம் நிறைய ஏற்ற தாழ்வுகளை கண்டுள்ளது. எங்களுக்கு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வரத்தகத்தின் நலன்கள் முக்கியம். அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் நியாயமாக இருக்க வேண்டும். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படும். வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடந்தது. இந்தியா தனது நலன்களுக்காக ஆதரவாக நிற்க வேண்டியுள்ளது. அமெரிக்கா உடனான மிக முக்கியமான பிரச்னை வர்த்தகம். இது நியாயமான விதிகளின் கீழ் இருந்தால், நாங்கள் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, நாம் விவேகத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.