சென்னை:''மக்களை தேடி மருத்துவம் போல, தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம், ஒரு வாரத்திற்குள் துவங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை அரசு பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 25.31 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறப்பு பிரிவு, உணவு அருந்தும் இடம், கலையரங்கம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை, அமைச்சர் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:பல் மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய தங்கும் விடுதி, 64.90 கோடி ரூபாய் மதிப்பில், 620 மாணவர்கள் பயன் பெறும் வகையில் கட்டப்பட உள்ளது. அதேபோல, சென்னை மருத்துவக் கல்லுாரியில், 750 முதுநிலை மாணவர்கள் பயன் பெறும் வகையில், 135 கோடி ரூபாய் மதிப்பில் விடுதி கட்டடம் கட்டப்படும்.ஜே.என்.1 கொரோனா பாதிப்பு குறித்து, மக்கள் அச்சப்பட தேவையில்லை. இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது, முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 1.67 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தொடர் சேவையின் வாயிலாக, 4 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், தொழிலாளரை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அந்த வகையில், தொழிற்சாலைகளுக்கே சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையிலான திட்டமாக, இது அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி இயக்குனர் சங்குமணி, பல் மருத்துவக் கல்லுாரி முதல்வர் பிரேம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.