சென்னை, நவ. 18- 'வெளி மாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் விவகாரத்தில், முதல்வர் தலையிட்டு தீர்வு காண கோரியும், நேரில் சந்திக்கவும் காத்திருக்கிறோம்' என, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி கேரள எல்லையை அடைந்த தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்தும் போராட்டத்துக்கு, மற்ற மாநில ஆம்னி பஸ் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், 11வது நாளாக ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து ஆணையருடன் நடந்த பேச்சில், எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. வரி விவகாரத்தில், முதல்வர் தான் நடவடிக்கை எடுப்பார் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, முதல்வரை சந்தித்து பேச, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது: மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல், தமிழகத்திலும் தேசிய 'பர்மிட்' ஆம்னி பஸ்களுக்கு வரி விலக்கு வேண்டும். இல்லாவிட்டால், தமிழக ஆம்னி பஸ்களுக்கு வரி விதிப்போம் என கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதை கண்டித்து, நாங்கள் வெளியூர் ஆம்னி பஸ்களை நிறுத்தி உள்ளோம். ஆம்னி பஸ்கள் நிறுத்தத்தால், இதுவரை 21 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல், தினமும் 10 ஆயிரம் பயணியர் முன்பதிவு செய்து, ரத்து செய்து வருகின்றனர். எனவே, ஆம்னி பஸ் பிரச்னைக்கு தீர்வு காண கோரி, முதல்வரை விரைவில் சந்தித்து பேச கோரிக்கை விடுத்துள்ளோம். அவரது அழைப்புக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.