சேலம்:''தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த, தி.மு.க., அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதே, அரசின் செயலாக உள்ளது,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.சேலம், மாமாங்கத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:பொங்கல் தொகுப்புடன் சேர்த்து, 1,000 ரூபாய் வழங்குவதாக, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. இதற்கு நிதி நிலையை காரணம் காட்டியுள்ளது.அதே முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, 5,000 கொடுக்க வேண்டும் என்றார்; தற்போது, 1,000 ரூபாய் கொடுக்கிறார்.தமிழக ஒட்டுமொத்த கடன் தொகை, 8.23 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், 40 சதவீதம், தி.மு.க., ஆட்சியில் மட்டும் வாங்கப்பட்டு உள்ளது. தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்த, தி.மு.க., அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பொருளாதாரத்தை சரி செய்யாமல் பஞ்சப்பாட்டு பாடுவதே, தி.மு.க., அரசின் செயலாக உள்ளது. இந்திய அளவில் மிக குறைந்த முதலீடு, தமிழகத்துக்குத் தான் வந்துள்ளது. முதல்வர் துபாய் சென்று வந்த பின், 6,000 கோடி ரூபாய் முதலீடு இன்னும் வரவில்லை.இதில், முதலீட்டாளர் மாநாடு நடத்தி, 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வரும் என்பதை ஏற்க முடியாது.சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது விவகாரத்தில், என்னை விசாரணைக்கு அழைத்தால் சந்திக்க தயார்.இன்னும் பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. இதில் தொடர்புடைய அனைத்து போலீஸ் அதிகாரிகளையும், வம்பிழுக்க தயாராக உள்ளேன். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக, மத்திய குழு முடிவெடுத்து அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.'போலீசுக்கு 8 மணி நேர வேலை'ஓய்வுபெற்ற எஸ்.பி., மோகன் தலைமையில், தமிழக போலீசில் ஓய்வுபெற்ற அதிகாரிகள், 61 பேர், அவரவர் குடும்பத்தினருடன், அண்ணாமலை முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அண்ணாமலை பேசியதாவது:கட்சியில் இணைந்தவர்கள், நிர்வாகிகளுடன் இணைந்து, அவரவர் பகுதிகளில் கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் பிரிவு, பா.ஜ.,வில் உள்ளது. அதேபோல போலீசாருக்குரிய பிரிவு, தலைமை அனுமதி பெற்று தொடங்கப்படும். போலீசில் பணியாற்றி என்னை போல, நீங்களும் கட்சியில் இணைந்துள்ளீர்கள். அதனால், போலீசார் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி நம் செயல்பாடு அமைய வேண்டும். தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், போலீசாருக்கு, 8 மணி நேர வேலை, வாரத்தில், 2 நாட்கள் விடுமுறை, மன அழுத்தமின்றி பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.