சென்னை:சென்னையில் இருந்து சேலத்திற்கு தனியார் பயணியர் விமானம், வழக்கமாக காலை, 11:20 மணிக்கு புறப்பட்டு சென்று, சேலத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு, மதியம் 1:50 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தடையும். அதேபோல, மற்றொரு தனியார் பயணியர் விமானம், காலை, 6:20 மணிக்கு, சென்னையில் இருந்து ஜெய்ப்பூர்; நண்பகல், 12:50 மணிக்கு சென்னையில் இருந்து அயோத்திக்கும், இரவு, 10:20 மணிக்கு சென்னையில் இருந்து ஆமதாபாதுக்கும் புறப்பட்டு செல்லும்.அயோத்தியில் இருந்து மாலை, 6:40க்கு, ஜெய்ப்பூரில் இருந்து பகல் 11:55க்கு, ஆமதாபாதில் இருந்து அதிகாலை 3:20 மணிக்கு சென்னை வந்து சேரும். இந்த மூன்று புறப்பாடு விமானங்கள், மூன்று வருகை விமானங்கள் என, ஆறு விமானங்களின் சேவை, சென்னை - சேலம் இடையே இரண்டு விமான சேவை என, எட்டு விமானங்களின் சேவை நேற்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர்.நிர்வாக காரணங்களால், இந்த விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால், சேலம் விமான நிலையம் அருகே, பிரதமர் மோடி பங்கேற்கும் பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்ததால், சென்னை - சேலம் விமான சேவையும்; போதிய பயணியர் இல்லாததால், அயோத்தி, ஜெய்ப்பூர், ஆமதாபாத் விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.