| ADDED : ஜன 29, 2024 12:03 AM
தேனி : தேனியை சேர்ந்த ஈஸ்வரன், தமிழ்செல்வி ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.33 லட்சம் மோசடி செய்த சென்னை மயிலாப்பூர் பிரசாத்குமாரை 47, போலீசார் கைது செய்தனர்.தேனி பத்ரகாளிபுரம் தனியார் நிறுவன ஊழியர் ஈஸ்வரன் 35. இவரிடம் உசிலம்பட்டி பாண்டி அறிமுகமானார். அவர் சென்னை பிரசாத்குமாரை தெரியும் என்றும், அவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். இதை நம்பிய ஈஸ்வரன் ரூ.5 லட்சத்தை பாண்டி மூலம், பிரசாத்குமாரிடம் வழங்கினார். அதற்கு அவர், மின்வாரியத்தில் தற்காலிக பணி என 'போலி' ஆணை வழங்கினார். ஆனால் ஈஸ்வரன் நிரந்தர வேலை வேண்டும் என கூறினார். ரயில்வே பணி வேண்டும் என்றால் மேலும் பணம் தர வேண்டும் என பிரசாத்குமார் கூறினார்.இதையும் நம்பிய ஈஸ்வரன் மேலும் ரூ. 14.18 லட்சத்தை வழங்கினார். பின் மொத்தம் ரூ.19.18 லட்சம் பெற்ற பிரசாத்குமார் வேலை வாங்கி தரமால் ஏமாற்றினார். அதே போல் கம்பம் உத்தமபுரம் பட்டதாரி தமிழ்செல்வியிடம் கம்பம் செந்தில்குமார் தனக்கு சென்னை பிரசாத்குமாரை தெரியும். பணம் கொடுத்தால் அவர் மூலம் அரசு வேலை கிடைக்கும் என கூறினார். இதனை நம்பிய அப்பெண் செந்தில்குமார் மூலம் ரூ.7.25 லட்சத்தை பிரசாத்குமாரிடம் வழங்கினார். வேலை வாங்கி தராததால் பணத்தை திருப்பி கேட்டார். தமிழ்செல்வியிடம் ரூ.2.10 லட்சத்தை பிரசாத்குமார் திருப்பி அளித்தார். மீதி பணத்தை தராமல் தொடர்ந்து ஏமாற்றினார். பாதிக்கப்பட்ட ஈஸ்வரன், தமிழ்செல்வி ஆகியோர் பிரசாத்குமார், பாண்டி, செந்தில்குமார் மீது தேனி எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர். எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். சென்னையில் தலைமறைவாக இருந்த பிரசாத்குமாரை கைது செய்தனர். மற்ற இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.