சென்னை: 'திருப்பரங்குன்றம் பிரச்னையில், 2014 உயர் நீதிமன்ற தீர்ப்பை, தமிழக அரசு பின்பற்றுகிறது' என, தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:
'திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில்தான், தீபம் ஏற்ற வேண்டும்' என, கடந்த 2014ல், உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் சட்டத்தை மதிப்பவர். கடந்த 2014ல், இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை மீறி, ஒரு நீதிபதி உத்தரவிட்டால், அதை எப்படி செயல்படுத்த முடியும்? கடந்த 2014ல் இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, தமிழக அரசு செயல்படுகிறது. கடந்த 2014ல் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காதவர்கள் மீது வழக்கு தொடர, தமிழக அரசுக்கு உரிமை உண்டு. 2014 தீர்ப்பை நீதிமன்றத்தில் மறைத்துள்ளனர். மத ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டான மண் தமிழகம். தமிழக அரசின் மனுவை, உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்து, சட்டத்துறையுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு மீது, ஏதாவது குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதே பழனிசாமியின் வேலை. திருப்பரங்குன்றம் பிரச்னையில், தமிழக அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டியவர், ஹிந்துத்துவ கைக்கூலிகளுக்கு அடிமையாக இருக்கிறார். கடந்த 2014ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வந்த தீர்ப்பு தான். இதை எதிர்த்து, அவர் மேல் முறையீடு செய்யவில்லை. அன்று புதிய இடத்தில், தீபம் ஏற்றுவதை எதிர்த்து, அப்போதைய அ.தி.மு.க., அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா ஏற்றுக்கொண்ட தீர்ப்பை, இன்று பழனிசாமி எதிர்க்கிறார். பா.ஜ.,வுக்கு முழு அடிமை என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்டம் -- ஒழுங்கை பாதுகாக்க, என்ன செய்ய வேண்டுமோ, அதை தமிழக அரசு செய்து வருகிறது. அதை மீறி எந்த சக்தி வந்தாலும், எதிர்கொள்ள தமிழக அரசு தயார். இவ்வாறு அவர் கூறினார்.