தொடர்ந்து எரியும் கொடைக்கானல் வனப்பகுதி: அணைக்க முடியாமல் வனத்துறை திணறல்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பெருமாள்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பரவி ஏராளமான வனம், வருவாய் நிலங்கள் தொடர்ந்து எரிந்து தீக்கிரையாகி வருகின்றன.மலைப்பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலால், வனப்பகுதியில் உள்ள புல் உள்ளிட்ட இதர தாவரங்கள் கருகி உள்ளன. சில தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு
தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சி பலன் அளிக்கவில்லை. சூறைக்காற்றால் தீ மளமளவென பரவி, பெருமாள்மலை, தோகைவரை வனப்பகுதி, வருவாய் நிலத்தில் நேற்று மாலை காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரிந்தது.வனத்துறை பல குழுக்களாக இரவு, பகலாக தீயை அணைக்க போராடுகின்றனர். வனப்பகுதியில் பரவும் காட்டுத்தீயால் வனவிலங்கு, மரங்கள் தீக்கிரையாகி, சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்துள்ளது.வன விலங்குகள் மலையடிவாரத்தில் உள்ள பட்டா நிலங்களில் தஞ்சமடைந்து, விவசாய பயிர்களை சேதம் செய்கின்றன. மனித, வன விலங்கு மோதல்கள் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.இதேபோல், வேடசந்துார் வடமதுரை ரோடு,- நத்தம் செங்குளம், கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட தோணிமலை, முட்டுக்கோம்பை பகுதிகளில் உள்ள வன பகுதிகளிலும் காட்டுத் தீ எரிந்தது. வனத்துறை யினர் எல்லா பகுதிகளிலும் போராடி வருகின்றனர்.இதற்கிடையே, நீலகிரி மாவட்டம், குன்னுாரில் ஆறு நாட்களாக எரியும் காட்டுதீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை தவிக்கிறது. அங்கு இரண்டாவது நாளாக ஹெலிகாப்டர் உதவியுடன் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணி நடந்தது.குன்னுார் 'பாரஸ்ட்டேல்' பகுதியில் கடந்த, 12ம் தேதி தேயிலை தோட்டத்தில் வைத்த தீ, அருகில் இருந்த வனத்திற்கு பரவி, தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.நேற்று முன்தினம், கோவை சூலுார் விமான நிலையத்தில் இருந்து வரவழைத்த ஹெலிகாப்டரின் 'பக்கெட்டில்', ரேலியா அணையில் இருந்து தண்ணீரை நிரப்பி கொண்டு வந்து, நான்கு முறை கொட்டினர். தீத்தடுப்பு கோடு
இதனால், மலையின் ஒரு பகுதியில் தீ அணைந்த போதும், மறுபுறம் தீவிரமாக பரவியது. தொடர்ந்து, நேற்று மீண்டும் ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, ஏழு முறை தண்ணீர் கொட்டி அணைக்கும் பணி நடந்தது.இருப்பினும் தீ முழுமையாக அணையவில்லை. வனத்துறை ஊழியர்கள் இந்த பகுதிகளில் தீ பரவாமல் தடுக்க தீத்தடுப்பு கோடு போடும் பணியில் ஈடுபட்டனர்.இதுவரை, 55 ஏக்கர் பரப்பளவில் தீ பரவி உள்ளது. சாம்பிராணி, பைன் உள்ளிட்ட மரங்கள் எரிந்துள்ளன. தீ முழுமையாக அணைந்த பிறகே மொத்த பாதிப்பு அளவு விபரம் தெரிய வரும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.