மேலும் செய்திகள்
திருநெல்வேலியில் தொடர் மழை: தாமிரபரணியில் வெள்ளம்
41 minutes ago
ரயிலில் தவறி விழுந்து பெயிண்டர் பலி
2 hour(s) ago
அதிகாரிகள் இன்று ஆய்வு
2 hour(s) ago
காங்க்ரா: துபாயில் நடந்த விமான கண்காட்சியில், விபத்தில் சிக்கி பலியான நம் விமானப்படையின் விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் உடலுக்கு, கோவை சூலுார் விமானப்படை தளத்தில் நேற்று இறுதி மரியாதை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சொந்த ஊரில் நடந்த இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், பல்வேறு நாடுகளின் விமான சாகச நிகழ்ச்சி கடந்த 21ம் தேதி நடந்தது. இதில், நம் விமானப்படை சார்பில் 'தேஜஸ் மார்க் --- 1' போர் விமானம் பங்கேற்றது. கோவையை அடுத்த சூலுாரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து சென்ற இந்த விமானத்தை, துபாய் நிகழ்ச்சியில்ல் விங் கமாண்டர் நமன்ஷ் சியால் இயக்கினார். வானில் சாகசத்தை துவங்கிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்த தேஜஸ், தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில், விமானி நமன்ஷ் சியால், 37, சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அவரின் உடல், சூலுார் விமானப்படை தளத்துக்கு நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோவை கலெக்டர் பவன்குமார், மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர் நமன்ஷ் சியால் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, நமன்ஷ் சியாலின் சொந்த ஊரான ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பாட்டியால்காருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த நமன்ஷ், சூலுார் விமானப்படை தளத்தில், 'தேஜஸ் விமான டாக்கர்ஸ்' என்னும் பிளையிங் டாக்கர்ஸ் பிரிவில் விங் கமாண்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2009 முதல் விமானப்படையில் பணிபுரிந்து வரும் நமன்ஷ், துபாய் கண்காட்சியில் பங்கேற்க தேஜஸ் விமானத்தை சூலுாரில் இருந்து அவரே ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. நமன்ஷ் சியாலுக்கு, அப்ஷான் என்ற மனைவியும், 7 வயது மகளும் உள்ளனர். விங் கமாண்டரான அப்ஷான், தற்போது மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில் விமானப்படை தொடர்பாக மேற்படிப்பு பயின்று வருகிறார். சொந்த ஊரில் நடந்த கணவரது இறுதிச்சடங்கிற்கு, விமானப்படை உடையுடன் வந்த அப்ஷான், சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்தார். அப்போது துக்கம் தாங்காமல் அவர் அழுதது, பார்ப்போரை கலங்க வைத்தது. வானில் அஞ்சலி செலுத்திய ரஷ்ய விமானக்குழு விமானி நமன்ஷ் சியால் மறைவுக்கு, ரஷ்யாவில் உள்ள ரஷ்ய நைட்ஸ் விமானக்குழு அஞ்சலி செலுத்தி உள்ளது. வானில், நான்கு விமானங்களில் பறந்த விமானக்குழு வீரர்கள், போர் விமானங்களை செங்குத்தாக இயக்கி, நமன்ஷ் சியாலுக்கு வீர வணக்கம் செலுத்தினர். துபாய் விமான கண்காட்சியில் பங்கேற்ற இந்த குழுவில் இடம்பெற்றுள்ள வீரர் ஒருவர் கூறுகையில், 'நமன்ஷ் பயணித்த விமானம் விபத்தில் சிக்கிய காட்சி இதயத்தை உறைய வைத்தது. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நமன்ஷ் உள்பட விமானத்தில் பயணித்து வீடு திரும்பாத வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், எங்கள் சாகச பயிற்சி அமைந்தது' என, தெரிவித்தார்.
41 minutes ago
2 hour(s) ago
2 hour(s) ago