கடலுார்: கடலுார் அருகே, சிப்காட் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக நடந்த கருத்துகேட்பு கூட்டத்தால், கட்சியினருக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கடலுார் சிப்காட் தொழிற்பேட்டையில், கெம்ப்ளாஸ்ட் சன்மார் சார்பில் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று காலை கண்ணாரப்பேட்டையில் நடந்தது. டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி தலைமை தாங்கினார். கூட்டம் துவங்கியதும், பா.ம.க., அன்புமணி தரப்பை சேர்ந்தவர்கள், 'ஏற்கனவே இந்த தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இடத்தில் தான் விரிவாக்கம் செய்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்,' என்றனர். பா.ம. க., தலைவர் ராமதாஸ் தரப்பை சேர்ந்த கிழக்கு மாவட்ட பா.ம.க, செயலாளர் கோபிநாத், 'கடலுார் சிப்காட்டில் மீண்டும் கிராமங்களை அழிக்கும் தொழிற்சாலைகள் வரக்கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட் டோம்,' என்றார். த.வா.க.,வை சேர்ந்தவர்கள் பேசுகையில், 'தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதால் இங்குள்ள மக்களுக்கு என்ன பயன், அதனால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யக்கூடாது,' என எதிர்ப்பு தெரிவி த்தனர். அதே சமயம், அந்த தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள், ஒப்பந்ததாரர்கள் என பயன்பெறுவோர் தொழிற்சாலை விரிவாக்கத்தை வரவேற்றனர். கட்சியினரும் ஒரு தரப்பினர் எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் வரவேற்றும் பேசியதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தை நடத்திய டி.ஆர்.ஓ., சொல்வதை யாரும் கேட்கவில்லை. தொடர்ந்து, கட்சிக்காரர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், டி.ஆர்.ஓ., புண்ணியக்கோட்டி கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதையடுத்து, போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.