| ADDED : நவ 28, 2025 06:51 AM
சென்னை: அரசு மருத்துவக் கல்லுாரி பணியிடங்களை நிரப்புவதில் தி.மு.க., அரசு தாமதம் செய்வதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள 34 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பாமல், தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது. காலி பணியிடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ ஆணையத்திடம் பெற்ற ஆறு மாத காலக்கெடு, நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. சென்னை மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட பல கல்லுாரிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகள் காலியாக உள்ளன. இவற்றை கைப்பற்ற, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்கள் துடிக்கின்றனர். அதற்கான தகுதி, பணிமூப்பு நிலையை, அவர்கள் அடையும் வரை கலந்தாய்வை நிறுத்தி வைத்து, அவர்களுக்கு சாதகமாக கலந்தாய்வு நடத்த, தி.மு.க., அரசு சதி செய்வதாக டாக்டர்கள் புகார் கூறுகின்றனர். தேசிய மருத்துவ ஆணையத்திடம் பெற்ற காலக்கெடுவுக்குள் காலியிடங்களை நிரப்பாவிட்டால், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் நிலை உருவாகும். அந்த நிலையை தவிர்க்க, பணியிட மாறுதல் கலந்தாய்வு முடித்த பேராசிரியர்களுக்கு, உடனடியாக பணியிட மாறுதல் ஆணை வழங்க வேண்டும். மற்ற காலி பணியிடங்களை, டிசம்பர் முதல் வாரத்திற்குள் நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.