உள்ளூர் செய்திகள்

/ லைப் ஸ்டைல் / சுற்றுலா /  வசீகரிக்கும் அழகில் வட்டடஒசஹள்ளி ஏரி

 வசீகரிக்கும் அழகில் வட்டடஒசஹள்ளி ஏரி

பெங்களூரில் வசிப்போர் வார இறுதி நாட்களில், தங்கள் குடும்பத்தினருடன் எங்கேயாவது ஒரு நாள் சுற்றுலா சென்று வர நினைப்பர். அதுவும் நகர வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மனதிற்கு அமைதியான சூழ்நிலையை அளிக்கும் இடங்களுக்கு செல்ல அதிக முன்னுரிமை கொடுப்பர். இப்படி நினைப்பவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது, வட்டடஒசஹள்ளி ஏரி. சிக்கபல்லாபூர் மாவட்டம், குடிபண்டே தாலுகா சப்பனஹள்ளி கிராமத்தில் வட்டடஒசஹள்ளி ஏரி உள்ளது. உள்ளூர் மக்களால் இந்த ஏரி, சப்பனஹள்ளி ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு மலைப்பகுதிகளுக்கு நடுவில் ஏரி பரந்து விரிந்து காணப்படுகிறது. 'வாக்கிங்' செல்வதற்கும், கூடாரம் அமைத்து தங்குவதற்கும் இந்த ஏரி கரை ஏற்ற இடமாக உள்ளது. ஏரியில் கயாக்கிங், ஜெட் ஸ்கீயிங் செல்லலாம். ஆனால் குறிப்பிட்ட துாரத்திற்கு மட்டுமே செல்ல முடியும். அதன்பின் ஏரி ஆழம் அதிகமாகி விடும். தென்மேற்கு பருவமழை முடிந்து, குளிர்காலம் துவங்கும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை, ஏரியை பார்வையிட உகந்த நேரமாக உள்ளது. சில்லென வீசும் காற்று, மனதை மயக்கும் பசுமை, மனதிற்கு புதிய அமைதியை தருகிறது. பரந்து விரிந்து காணப்படும் ஏரி, வசீகரிக்கும் அழகில் உள்ளது. பருவமழைக்கு பின் இங்கு பல வகையான பறவைகளும் வருவது, பறவை ஆர்வலர்கள் கண்களுக்கு விருந்தாக அமையும். ஏரியில் குளிக்கவும் அனுமதி உண்டு. ஆழம் அதிகமாக இருப்பதால், கவனமாக குளிக்க வேண்டியது அவசியம். விஜயநகர பேரரசு ஆட்சி காலத்தில், விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கவும், குடிநீர் பிரச்னையை தீர்க்கவும் இந்த ஏரி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்கவும், புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து குடிபந்தேவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் செல்கின்றன. குடிபண்டே சென்று அங்கிருந்து ஆட்டோவில் ஏரிக்கு செல்லலாம். ரயிலில் செல்வோர் சிக்கபல்லாபூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து குடிபந்தேவுக்கு பஸ்சில் சென்று பின், ஆட்டோவில் செல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து கார், சொந்த வாகனங்களில் செல்வோர் பல்லாரி சாலையில் சென்று, குடிபண்டே செல்ல வேண்டும். அங்கிருந்து சில கிராமங்களை கடந்து சப்பனஹள்ளி கிராமத்திற்கு செல்லலாம். இக்கிராமத்திற்கு செல்லும் வழியில் ஏராளமான விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள், கிராம வாழ்க்கை முறையை நேரில் பார்த்து செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வட்டடஒசஹள்ளி ஏரியில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் பைரசாகர் ஏரியும் உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை