உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள கர்நாடகாவின், 'மினி நயாகரா' என்று அழைக்கப்படும் சதோடி நீர்வீழ்ச்சி. அடர்ந்த கல்லரமனே காடு வனப்பகுதியில் பல்வேறு நீரோடைகள் சேர்ந்து 50 அடி உயரத்தில் இருந்து அருவியாக விழுகிறது. கணேஷ்குடி வனப்பகுதிக்குள் இந்த நீர்வீழ்ச்சி வருகிறது. தண்டேலி பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். சாகச பிரியர்கள், மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்ற இடம். இந்த இயற்கை அதிசயத்தை அடைய, நீங்கள் பசுமையான காடுகள் வழியாக 20 நிமிடங்கள் நடக்க வேண்டும். அங்கு அருவியாக விழும் நீரின் இனிமையான சத்தம் பயணத்துக்கு ஏற்றதாக அமையும். எல்லாபூரில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்லும் அடர்ந்த வனப்பகுதி வழியாக காளி ஆறு செல்வது கண்களுக்கு விருந்தாக இருக்கும். இவ்வழியாக செல்ல ஏற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. நீர்வீழ்ச்சியை காண, பெயரளவில் ஒருவருக்கு 5 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இங்கு நீச்சலும் அடிக்கலாம். ஆனால், மழை காலத்தில் நீச்சல் அடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இங்கு ரத்தத்தை உறுஞ்சும் அட்டை பூச்சிகள் ஏராளம் உள்ளன. நீர்வீழ்ச்சி அருகில் உள்ள பாறைகள் வழுக்கும். எனவே, அதன் மீது ஏறுவதை தவிர்க்கவும். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் கையில் தடியுடன் செல்வது சிறந்தது. ஏனெனில், குரங்குகள் உங்களின் உடைமைகளை பறித்து சென்றுவிடும். நீங்கள் இயற்கை ஆர்வலராக இருந்தாலும் சரி, சாகசப் பிரியராக இருந்தாலும் சரி, அல்லது அழகிய சூழலில் ஓய்வெடுக்க விரும்புபவராக இருந்தாலும் சரி, சத்தோடி நீர்வீழ்ச்சி ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும். காலை 6:00 முதல் மாலை 5:00 மணிக்குள் இங்கு சென்று வரலாம். நவம்பர் முதல் ஏப்ரல் மாதத்தில் இங்கு செல்ல ஏற்ற நேரமாகும். எப்படி செல்வது? l பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், கார்வார் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து பஸ்சில் எல்லாபூர் சென்று, அங்கிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். l பஸ்சில் செல்வோர், எல்லாபூர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: அன்ஷி தேசிய பூங்கா, அத்திவேரி பறவைகள் சரணாலயம், உலவி குகைகள் - நமது நிருபர் --:.