2023 காலமும் காட்சியும்
காலம்ஜனவரி 24, 2023பிற்பகல் 2:30 மணி களம்ஆர்.டி.ஓ., அலுவலகம், திருவண்ணாமலை.'எங்க கிராமத்துல இருக்குற ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலுக்குள்ளே போக மூணு தலைமுறைகளா எங்களுக்கு அனுமதி இல்லை. இன்னைக்கு இங்கே நடந்த பேச்சு வார்த்தையில, 'தீண்டாமை ஒழிப்பு தினமான ஜனவரி 30ம் தேதி கோவிலுக்குள்ளே போய் வழிபடலாம்'னு அனுமதி கிடைச்சிருக்கு!' - சந்தோஷத்தில் தண்டராம்பட்டு, தென்முடியனுார் கிராம பட்டியலின மக்கள்! அனுமதி கிடைத்தபின் கிராமத்தில் ஒலித்த குரல்கள்...காலம்ஜனவரி 30, 2023காலை 11:00 மணிகளம்ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வளாகம்அரசு அதிகாரிகள் முன்னிலையில் பட்டியலின மக்களுக்காக கோவில் திறக்கப்பட, அபிேஷகப் பொருட்களை தலையிலும் கைகளிலும் ஏந்தியபடி, 'அம்மா... தாயே... ' எனும் பரவச குரல்கள். '80 ஆண்டுகள் காத்திருந்து அம்மனை தரிசிச்ச சந்தோஷத்துல பொங்கல் வைச்சு அவளை மனசார கும்பிட்டோம்!' - அன்றைய சிலிர்ப்பை இன்றும் நினைவில் நிறுத்தி பேசுகின்றனர் பெண்கள்! 2023ம் ஆண்டின் அந்நாளுக்குப் பின்...இந்திரா: கோவில் பிரச்னையில நான் குரல் உயர்த்தினதுக்காக என் கடையை பிப்ரவரி 7ம் தேதி கொளுத்திட்டாங்க! பிரகாஷ்: கரும்பு காட்டுக்கு வர்ற தண்ணீரை தடுத்தாங்க; விவசாயக் கூலி வேலைக்கு எங்களை கூப்பிடலை; எங்க பகுதி கறவை மாட்டுப்பாலை வாங்கலை! குபேந்திரன்: 'பட்டியலின மக்கள் புகுந்த கோவிலுக்குள்ளே நாங்க போக மாட்டோம்'னு மத்தவங்க சொல்லிட்டதால கோவிலை பூட்டிட்டாங்க! காலம் செப்டம்பர் 23, 2023காலை 6:00 மணிகளம்ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் வளாகம்'மீண்டும் கோவிலை திறந்து பட்டியலின மக்களின் வழிபாட்டை உறுதி செய்ய வேண்டும்; இல்லையேல் செப்டம்பர் 30ம் தேதி ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும்' எனும் குரல்களால், ஆட்சியர் உத்தரவின் பேரில் எட்டு மாதங்களுக்குப் பின் கோவில் திறக்கப்பட்டது. 'கோவில் இனி தினசரி திறக்கப்படும்' என்ற உறுதியும் அளிக்கப்பட்டது. இன்று...வாரம் ஓரிரு முறை மட்டுமே கோவில் திறக்கப்படுகிறது. பட்டியலினத்தவர் மட்டுமே கோவிலுக்கு வருகின்றனர். திருவிழா நடத்த அனுமதியில்லை. 2025 பொங்கல் தினத்தில் கோவில் திறக்கப்படவில்லை. கிராமத்தின் பிற சமூக மக்கள் தனியாக அம்மன் சிலை வைத்து வழிபடுகின்றனர்! 'சமூகநீதி'யை நிலைநாட்ட உழைக்கும் தமிழக முதல்வரே... மக்களின் குரல் கேட்டீர்களா?