அது... நீங்களா?
திண்டுக்கல் நேருஜி நகரில் இருக்கும் கோழி நாடார் கடை; இரவு 7:00 மணி; மழை துாறிக் கொண்டிருந்தது. ஆர்டர் கொடுத்துவிட்டு பெரும் ஆவலோடு காத்திருந்தேன். என் கண்களில் இருந்த தவிப்பை ரசித்தபடியே கடந்து செல்ல முனைந்த முதலாளி, என்ன நினைத்தாரோ... சட்டென்று என் பக்கம் திரும்பி, 'கறி இட்லி ரெடியாயிட்டு இருக்கு; இப்ப வந்திரும்' என்றார். அவர் சொன்னது போலவே, அடுத்த நிமிடத்தில் மணக்க மணக்க ஆவி பறக்க வந்தது கறி இட்லி! பரிமாறியவரை நிறுத்தி, 'இதை எப்படி செய்றீங்க?' என்று கேட்டபடியே, தன் வெள்ளை நிறத்தை கமகம மசாலாவில் இழந்திருந்த இட்லி துண்டுகளில் ஒன்றை எடுத்து வாயில் போட்டேன். நான் ருசிப்பதை ரசித்தபடியே கேள்விக்கு பதில் சொன்னவர், 'ருசி எப்படி?' என்று கேட்க, 'ம்ம்ம்... ஆளை மயக்குது போங்க' என்றேன். பத்தே நிமிடம்... மொத்தத்தையும் முடித்துவிட்டு கல்லாவிற்கு வந்தேன்! அங்கு ஒரு இளைஞர் நாலு பார்சல் கறி இட்லிக்கு பணம் செலுத்தியபடியே... 'அமரன் சிவகார்த்திகேயனை கொண்டாடுற அளவுக்கு மேஜர் முகுந்த் வரதராஜனை நீ கொண்டாடுனியா?' என்று செல்போனில் யாருக்கோ மூளை கழுவிக் கொண்டிருந்தார். அது நீங்களா?கோழி நாடார் கடை: 94436 75022