அது... நீங்களா?
சென்னை ராமாபுரம், செல்வி அம்மாள் கிராமிய உணவகம். வழக்கமாய் இங்கு இரவு உணவுக்காக வருவேன்; அன்று மதிய உணவுக்காக சென்றிருந்தேன்!இங்கு சமைப்பதும் பரிமாறுவதும் பெண்களே; என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர்களில் ஒருவர், 'உங்களுக்கு பிடிச்ச ஆட்டு ஈரல் இருக்கு சார்; பொன்னி அரிசி சாப்பாடா... கறுப்பு கவுனி அரிசி சாப்பாடா' என்றார்.நான் பதில் சொன்னதும் எனது வாழை இலையில் சுடச்சுட கறுப்பு கவுனி சோறுடன், ஆட்டு ஈரல், வெண்டைக்காய் கூட்டு, முட்டைகோஸ் பொரியல், அப்பளம் நிறைய, சைவ குழம்பை மறுத்து நண்டு குழம்புடன் ஆரம்பித்தேன். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயின் மகிமை, ஈரல் கிரேவியின் அதீத ருசியில் பிடிபட்டது! விறகடுப்பு சமையலில் வீட்டு மசாலாவுடன் ஈரல் 'ஜம்'மென்று வெந்திருந்தது. 'விடுமுறையில் வீடு வந்த பிள்ளைக்கு தாயின் கைப்பக்குவம் எப்படி ருசிக்குமோ அப்படி சமைத்து படைப்பதுதான் எங்களது இலக்கு' என்ற உணவக முதலாளியின் வார்த்தைகளை காப்பாற்றியது சாப்பாட்டின் ருசி!ரசம், மோரில் தலா ஒரு ரவுண்டு முடித்து 'ஆம்லெட்' ஆர்டர் செய்த இடைவெளியில், வெறும் இலையை வழித்துக் கொண்டிருந்தேன். 'ஆதாரம் காட்டுன்னு சொல்றதே... 'ஆதாரம் இருக்குமோ'ங்கிற அச்சத்தின் வெளிப்பாடுதானே?' என்று நண்பருக்கு சத்தமாய் அரசியல் அறிவு ஊட்டிக் கொண்டிருந்தார் பக்கத்து மேஜைக்காரர். நல்லெண்ணெயில் வதக்கிய பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு உள்ளிட்டவற்றுடன் மட்டன் மசாலா மணக்க வரும் ஈரல் குழம்பே... நீ வாழ்க! அந்த குங்கும பொட்டுக்காரர் நீங்களா?95000 46072