முதல்வரே ஒரு நிமிஷம்!
செய்தி: திண்டுக்கல், கொடைக்கானல் அரசுப்பள்ளி அருகே புதரில் எரிந்து கிடந்த மாணவி!அநீதி: மகளின் மர்ம மரணத்திற்கு மூன்று ஆண்டுகளாக நீதி கேட்கும் தாய்!அரசே... 'கொடைக்கானல்' என்றதும் உம் நினைவிற்கு வருவதென்ன; 'கோல்ப்' மைதானமா... இல்லை, பாச்சலுார் மலைக்கிராம அரசுப்பள்ளியின் மாணவி, வகுப்பு நேரத்தில் கருகிக் கிடந்த கொடூர நிகழ்வா?'சத்யராஜ் - பிரியதர்ஷினி' ஆகிய நாங்கள், அன்று கருகி துடிதுடித்து இறந்த அந்த பிஞ்சின் பெற்றோர்! பாச்சலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என் இளைய மகள், டிசம்பர் 15, 2021 மதியம் 12:30 மணி அளவில், பள்ளியின் பின்புறமுள்ள புதரில் எரிந்த நிலையில் கிடந்தாள். அள்ளியெடுத்து ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவளது உயிர் பிரிந்துவிட்டது. தாண்டிக்குடி காவல் நிலையத்தில் 'சந்தேக மரணம்' என வழக்கு பதிவாகியது. 'நீதி, நிவாரணம், அரசு வேலை பரிந்துரை' என அரசு தரப்பில் வழக்கமாக சொல்லப்படும் சாமர்த்திய சமாதானங்களுக்குப் பின் உடலை வாங்கிச் சென்று விட்டோம். சம்பவத்திற்கு அடுத்த வாரமே சி.பி.சி.ஐ.டி., வசம் வழக்கு சென்று விட்டது. ஆனால், இன்னமும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை! அன்று என் மகளுக்கு நிகழ்ந்தது என்ன; அவளை எரித்துக் கொன்றது யார்; என் மகளின் மரணத்திற்கு எப்போது நீதி கிடைக்கும்?இது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும் ஆட்சியா; மனசாட்சியோடு பதில் சொல் அரசே!