உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு வசதிகளின் விபரங்களை பத்திரத்தில் ஏற்ற வேண்டும்!

அடுக்குமாடி குடியிருப்புகளில் சிறப்பு வசதிகளின் விபரங்களை பத்திரத்தில் ஏற்ற வேண்டும்!

தமிழகத்தில் தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதில், சாதாரண வகை, பிரீமியம், லக்சரி என்று பல்வேறு வகைகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது தற்போது பரவலாக அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அடுக்குமாடி குடியிருப்புகள் என்றால், அதில் என்னென்ன பொது வசதிகள் இருக்கும் என்பதில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதில் கட்டுமான நிறுவனங்கள் சொல்வதை அப்படியே கேட்டுக்கொள்ளும் நிலைதான் இருந்தது.ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது, இணையதள வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால், பொது வசதிகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீட்டுக்குள்என்னென்ன சிறப்பு வசதிகள் வேண்டும், வீட்டுக்கு வெளியில் என்னென்ன சிறப்பு வசதிகள் வேண்டும் என்பதில், மக்களிடம் பல்வேறு எண்ணங்கள் எழுந்துள்ளன. வீடு வாங்கும் நிலையில், வசதிகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் மட்டுமல்லாது, அது சார்ந்த ரசனையிலும் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. இந்நிலையில் ஆடம்பர வசதிகளை செய்து கொடுப்பதற்கு கட்டுமான நிறுவனங்கள் உள் அலங்கார வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு குழுக்களை அமர்த்தி உள்ளன. இந்நிலையில், பெரிய கட்டுமான நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் அளிக்கப்படும் சிறப்பு வசதிகள் குறித்த விரிவான பட்டியலை விற்பனையின்போது மக்களுக்கு அளிக்கின்றன. பொதுமக்களும் இந்த பட்டியலில் குறிப்பிடப்படும் வசதிகள் என்ன என்று படித்து பார்க்காமல், அதன் எண்ணிக்கையை பார்க்கின்றனர். எந்த நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான பொது வசதிகளை அளிக்கிறது என்ற ரீதியில் மக்களின் தேடல் செல்லும் நிலை வந்துள்ளது. இதனால், கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கும் பட்டியலில் இடவசதிகள் என்ன, அதன் பயன்பாடு என்ன, அதை பராமரிப்பதற்கு என்ன செலவாகும் என்பது போன்ற விபரங்களை மக்கள் விசாரிப்பதில்லை. குறிப்பாக, நீச்சல் குளம், சமுதாயக் கூடம், பூங்கா, விளையாட்டு திடல், தியான மண்டபம் என அடிப்படையாக சில வசதிகளை எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால், நடைமுறையில் தினமும் பயன்படுத்த முடியாத வசதிகளை மக்கள் எதிர்பார்ப்பது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். வீடு விற்பனையின்போது கட்டுமான நிறுவனங்கள் தெரிவிக்கும் சிறப்பு வசதிகள் பட்டியலில் எண்ணிக்கையை சரிபார்ப்பதுடன் நின்றுவிடாமல், அதை கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்துங்கள். கட்டுமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டால் மட்டுமே, அதில் விடுபட்ட வசதிகளை மீண்டும் கேட்டுப் பெற முடியும் என்கின்றனர் கட்டுமானத் துறை வல்லுனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை