உள்ளூர் செய்திகள்

21மே 2010 - ஒரு டாக்டரின் டைரி குறிப்பு

கடந்த 2006 ஜுன் மாதம் 3ம் தேதி, தன் கணவர் ராகவனோடு பத்மாவதி வந்திருந்தார். 'டாக்டர்... இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது. நெஞ்சு வலிக்கும் போதெல்லாம் வியர்த்து வழிகிறது. இதய நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ?' என்று பதறினார் பத்மாவதி. 'உடம்புக்கு பிரச்னைன்னா சொல்றதே இல்லை டாக்டர். தினமும் சாப்பாட்டுல அசைவ உணவு இருக்கணுமாம்! உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொன்னா கேட்டாத்தானே! வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இப்போ இவருக்கு ஏதாவது ஒண்ணுன்னா, நான் என்ன பண்ணுவேன்?' அழத் துவங்கினார் பத்மாவதி.பத்மாவதியின் கணவருக்கு 42 வயதுதான் ஆகிறது. சில மருத்துவப் பரிசோதனைகள் செய்து பார்த்ததில், அவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் அதிகமாகவே இருந்தன. உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை அதிகமாக இருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமல்ல... உயர் ரத்த அழுத்தத்தோடு, கொலஸ்ட்ராலும் இருந்தால், பக்கவாதம் வரவும் வாய்ப்புகள் அதிகம். ராகவனோடு பேசினேன்.'புகைப்பழக்கம், ஆல்கஹால் அருந்துவது, சர்க்கரை நோய், மரபணுத்தன்மை, உடல் உழைப்பு இல்லாமை, உணவுப்பழக்கம் போன்றவை மாரடைப்புக்கு முக்கிய காரணங்கள் என்றாலும், கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள மாமிச உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அது, ரத்தக்குழாய் எனப்படும் தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைத்து, ரத்த ஓட்டத்தை தடுக்கும்!' என்றேன். தனக்கு இதுவெல்லாம் தெரியும் என்பது போல சிரித்துக் கொண்டார் ராகவன்.'மாரடைப்பு என்பது தலைவலி மாதிரி அல்ல! அது, நடு நெஞ்சில் பொறுக்க முடியாத அளவுக்கு கடுமையான வலி தரும். 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். இடது தோள் மூட்டு, இடது கை, கழுத்து, முதுகு என்று வலி பரவும். மற்ற நாடுகளைக் காட்டிலும், நம் நாட்டில் மாரடைப்பு பாதிப்பு அதிகம். 30 முதல் 45 வயதுள்ளவர்களை அதிகம் பாதிக்கும்' என, அவருக்கு பயம் காட்டினேன். அவர் பயப்பட்டதாக தெரியவில்லை. பத்மாவதி மட்டும் அழுது கொண்டிருந்தார்.இன்றுதான் தகவல் கேள்விப்பட்டேன். பத்மாவதி ஆதரவின்றி தவிக்கிறாராம்! ஆம்... 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்' என்பது, ராகவன் விஷயத்தில் உண்மையாகி விட்டது.- டாக்டர் வைத்தியநாதன்இதயநோய் நிபுணர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்