உள்ளூர் செய்திகள்

ஒரு டாக்டரின் டைரி குறிப்பு - எஸ்.எம்.சந்திரமோகன், குடல், இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர்

அவரது பெயர் தங்கம். வயது 27 இருக்கும். அமைதியான, ஆனால் துணிவான பெண். 2005 பிப்ரவரி மாதத்தில், என்னை பார்ப்பதற்காக வந்திருந்தார். 'உணவு விழுங்குவதில் பிரச்னை' என்று சொன்னார். அவருக்கு 'உணவுக்குழாய் புற்றுநோய்' இருப்பதை உறுதி செய்தேன். திருமணம் வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். தங்கத்தின் மீது கொண்ட அன்பால், அவரது காதலர் என் பேச்சை மீறினார்.நான் கணித்த மூன்று வருடங்களையும் கடந்து தங்கம் வாழ்ந்தார். சந்தோஷப்பட்டேன். ஆனால், இன்று காலை தங்கம் ரத்தம் கக்கியிருக்கிறார். அன்பு கணவனும், மகனும் காரணம் உணர்வதற்குள், நொடிப்பொழுதில் கடவுளோடு இணைந்து விட்டார்.ஒவ்வொரு மரணம் நிகழும் போதும், இந்த 'உணவுக்குழாய் புற்றுநோய்' அரக்கன் பற்றி நான் நினைப்பதுண்டு. இன்றும் நினைக்கிறேன்.50 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும்தான், இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும், பெண்களை விட, ஆண்களுக்குத்தான் வாய்ப்பு அதிகம். புகைபட்டு தயாராகும் உணவுகளும் (பார்பிக்யூ உட்பட), திரும்பத் திரும்ப உபயோகிக்கப்படும் எண்ணெய்களும், புகையிலை மற்றும் மது பழக்கமும் இந்நோய்க்கான அழைப்பிதழ்கள். அதிசூடான உணவும், அதீத உப்பு கலந்த உணவும் கூட, உணவுக்குழாய் புற்றுநோயை உருவாக்கும்.உணவு விழுங்குவதில் ஏற்படும் சிரமம்தான், இப்புற்று உணவுக்குழாய்க்குள் நுழைந்து விட்டதற்கான அறிகுறி. முதலில் திட உணவுகள் இரைப்பையை அடைய சிரமப்படும். அடுத்து, திரவ உணவுகள். நோய் உறுதியாகி, இந்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தாலே, மூன்று முதல் ஐந்து வருடங்கள்தான் ஆயுள். இடைப்பட்ட காலங்களுக்கு கீமோதெரபி (மருந்து), ரேடியோதெரபி (கதிர்வீச்சு) மட்டுமே வழி. ஆரம்பநிலையிலேயே இந்நோயை கண்டறிந்து விட்டால், பாதிக்கப்பட்ட உணவுக்குழாயை நீக்கிவிட்டு, இரைப்பையை உணவுக்குழாயாகவும் செயல்பட வைக்கலாம்.எது எப்படியோ, உணவுக்குழாய் புற்றுநோயின் பசிக்கு இன்று... தங்கம்! இன்னும் எத்தனை பேரின் உயிரை ருசி பார்க்க இந்த புற்றுநோய் காத்திருக்கிறதோ? ஆனால் ஒன்று... பாதுகாக்கப்பட்ட உணவுகளும், முறையான உணவுப்பழக்கங்களும், சுத்தமான காய்கறிகளும், இந்நோயை நிச்சயம் மிரட்டும் என்பது மட்டும் நிஜம்.தங்கத்தின் ஆன்மா, இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !