ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
சிவா, 10 வயது சிறுவன்; ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்; வகுப்பில், அவன்தான் முதல் மாணவன்! ஆனால், கொஞ்ச நாட்களாய் படிப்பில் பெரும் பின்னடைவு! பள்ளிக்கூடம் செல்வதற்கே சங்கடப்பட்டிருக்கிறான். இன்று, அவன் என்னைப் பார்க்க வந்தான். சிவாவிடம் பேசிப் பார்த்ததில், அவன் சக நண்பர்களுக்கு மீசை முளைத்ததும், இவனுக்கு இன்னும் முளைக்காமல் இருப்பதும்தான் பிரச்னை என்று தெரிந்தது. 'பெண் பிள்ளை' என்று நண்பர்களால் கேலி செய்யப்பட்டதால், மன உளைச்சலுக்கு ஆளாகி, படிப்பில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது!பொதுவாக, பதின் பருவம் என்பது 12 வயதில்தான் துவங்குகிறது என்றாலும், அதற்கான தயாரிப்புகளை, 9 வயதிலேயே உடல் துவக்கி விடுகிறது. முதற்கட்டமாக, பிட்யூட்டரி சுரப்பியில், எப்.எஸ்.எச்., எனப்படும், 'பாலிக்கல் ஸ்டிமுலேட்டிங்' ஹார்மோனும், 'லியூட்டினைசிங்' ஹார்மோனும் தூண்டப்பட்டு, 'டெஸ்ட்டோஸ்டிரான்' ஹார்மோன் சுரக்கும்; இதனால், உடலில் பருவ மாற்றம் துவங்கும்.ஆண் பருவம் எய்துதலின் அடுத்த கட்டமாக, இரண்டாம் கடைவாய் பல் முளைக்கும். உடலில் முடி வளர்ச்சி, மீசை அரும்புதல், குரல் மாற்றம், உயரம் மற்றும் பருமன் கூடுதல் என, படிப்படியாக பருவ மாற்றத்திற்கான அறிகுறிகள் தெரியும். இதோடு, பிறப்புறுப்பின் வளர்ச்சியிலும் மாற்றம் இருக்கும். 11 - 12 வயதிற்குள் உயிரணுக்கள் உற்பத்தியாகும். 15 வயதில், முழு வளர்ச்சியடைந்த உயிரணுக்கள் வெளியேறத் துவங்கும். 18 வயதிற்கு மேல் எடை கூடும்; ஆனால், உயரம் நின்று விடும்! 21 - 24 வயதில், முழுப்பருவம் அடைந்த நிலையில், மூன்றாம் கடைவாய் பல் முளைக்கும். இத்தகைய மாற்றங்களால், பல்வேறு விதமான சந்தேகங்களும், குழப்பங்களும் நிகழ்வது இயல்பே!சிவாவை பொறுத்தவரை, ஆணுக்குரிய, 'டெஸ்ட்டோஸ்டிரான்' சுரக்க தாமதமானதே, அவன் பிரச்னைக்கு காரணம். சிலருக்கு, இந்நிகழ்வுகள் தாமதமாக நிகழும்; இது இயல்பானதுதான்! இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை. சிவாவிற்கு, அவனுடைய பிரச்னையை, உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் விளங்க வைத்தேன்; சந்தோஷமாய், விடைபெற்றான். அவன், இழந்த படிப்பில், அவன் மீண்டு வருவான் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்பட்டிருக்கிறது.- எஸ்.யமுனா, வளர் இளம் பருவ சிறப்பு மருத்துவர்.