உள்ளூர் செய்திகள்

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!

துாக்கமும் கண்களை தழுவட்டுமே! எங்கள் மையத்திற்கு மருத்துவ ஆலோசனைக்கு வந்த, 1,000 பேரை ஆய்வு செய்ததில், 650 பேருக்கு, துாக்கமின்மை தொடர்பான அறிகுறிகள் இருப்பது தெரிந்து, தாங்களாகவே ஆலோசனைக்கு வந்தனர்; வெறும், 35 சதவீதத்தினர் மட்டுமே, வேறு டாக்டர்களின் சிபாரிசுடன் வந்தவர்கள். இருபது ஆண்டுகளுக்கு முன், நான் அமெரிக்காவில் படித்த போது, வெளியான ஆய்வில், 4 சதவீதம் பேர், துாக்கமின்மையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிந்தது; அந்த சமயத்தில், இந்தியாவில், 10 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். துாக்க மருத்துவம் என்பது, 25 ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவில் நடைமுறையில் இருந்தது. இந்தியாவில், இது போன்ற மருத்துவ முறை, கடந்த, 10 ஆண்டுகளாகவே உள்ளது.சமீப காலங்களில், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் தொற்றா நோய்களான, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் குறித்து, அதிகமாகப் பேசுகிறோம். எந்த அளவிற்கு இந்த நோய்கள் பொதுவானவையோ, அதைப் போலவே, 'ஸ்லீப் அப்னியா' எனப்படும் துாக்கமின்மை பிரச்னையும் பொதுவானது.நீரிழிவு, உயர் ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பவர்களில், 24 சதவீதத்தினருக்கு, துாக்கமின்மை இருக்கிறது. தவிர, 'ஒபிசிட்டி' எனப்படும், அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கும், துாக்கமின்மை பிரச்னை உள்ளது.இந்த உடல் பிரச்னைகளுக்கும், துாக்கமின்மைக்கும் நேரடி தொடர்பு இல்லை. அதாவது, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இருந்தால், துாக்கமின்மையும் இருக்கும் என்பதில்லை; ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்பட்ட உடல் பிரச்னைகளுக்கு, தொடர்ந்து மருந்து சாப்பிட்டும், கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்றால், 'ஸ்லீப் அப்னியா' உள்ளதா என்பதை, அவசியம் பரிசோதிக்க வேண்டும்.'ஸ்லீப் அப்னியா' என்பது என்ன?துாங்கும் போது, நம்முடைய தசைகள் எல்லாம், 'ரிலாக்ஸ்' ஆக இருக்கும்; உடல் முழுவதிற்கும் சீரான ஆக்சிஜன் கிடைக்கும். ஆனால், துாங்கும் போது, சுவாசத்தில் தடை ஏற்பட்டால், சுவாசக் குழாயின் பின்புறம் உள்ள மென்மையான திசுக்களில், சிதைவு ஏற்படும். பிராண வாயு கிடைப்பதில் தடை ஏற்பட்டு, நுரையீரலுக்கு போதுமான காற்று கிடைக்காமல், குறட்டை வர ஆரம்பிக்கும். இன்னொரு வகையில், சுவாசிப்பதில் கட்டுப்பாடு இல்லாமல் போவது. இந்நிலையில், சுவாசிப்பதற்கான சமிக்ஞை, மூளையிலிருந்து தசைகளுக்கு கிடைப்பதில்லை.சுவாசிப்பதில் ஏற்படும் தடை, அடிக்கடி நம்மையும் அறியாமல், துாக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளச் செய்யும். துாக்கமின்மை பிரச்னை இருந்தால், குறட்டை, தலைவலி, எரிச்சல், பதற்றம் போன்ற பொதுவான பிரச்னைகள் வரும். தொடர்ந்து, ரத்த நாளங்களுக்கு போதுமான பிராண வாயு கிடைக்காமல், ரத்த நாளங்களில் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், 'ஸ்ட்ரோக்' உடல் பருமன் அதிகரிப்பது, செரிமானக் கோளாறு, குறட்டை என, பலவிதமான பிரச்னைகள் வரும். குறட்டை விடுபவர்களுக்கு எல்லாம், துாக்கமின்மை இருக்கும் என்று கூற முடியாது; ஆனால், துாக்கமின்மை இருந்தால், கண்டிப்பாக குறட்டை வரும்.துாக்கமின்மை பிரச்னை, பொதுவாக, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே வரும் என்றாலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, எந்த வயதினரையும் பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. சமீப ஆண்டுகளில், உடல் பருமன் குழந்தைகளிடம் அதிகரித்து இருப்பதால், துாக்கமின்மையும் குழந்தைகளுக்கு இருக்கிறது. துாக்கமின்மை பிரச்னைக்கு மருந்துகள் என, எதுவும் கிடையாது. அது தொடர்பான அறிகுறிகளுக்கு மட்டுமே மருந்து தர முடியும்.துாங்கும் நேரத்தில், சுவாசத்தில் ஏற்படும் தடையை சீர் செய்வதற்கு, பிரத்யேக கருவி ஒன்று உள்ளது; இதை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம். டாக்டர் என்.ராமகிருஷ்ணன், துாக்க அறிவியல் சிறப்பு நிபுணர், சென்னை. ram@nithra.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்