கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: கொள்ளை நோயை விடவும் கொடியது!
சமீபத்தில், '10 மாதங்களில், தமிழகத்தில், சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 14 ஆயிரத்திற்கும் அதிகம்...' என, ஓர் ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இவர்களில், குழந்தைகள் முதல், 40 வயதிற்குட்பட்ட இளம் வயதினர் வரை தான் அதிகம். மாதத்திற்கு, 1,000க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் இறப்பது என்பது, பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்களால் ஏற்படும் உயிர் இழப்புகளை காட்டிலும் அதிகம். இந்தியாவை தவிர, வேறு எந்த நாட்டிலும் இது போன்ற நிலை இல்லை. எப்படி இது நடக்கிறது என ஆய்வு செய்தால், முக்கிய காரணம், சாலை விதி மீறல்கள்...மேலை நாடுகளில், ஒரு வாகனத்தின் ஆயுட்காலம், 20 ஆண்டுகள் என்றால், அதற்கு பின் அந்த வாகனத்தை ஓட்டவே முடியாது; பின்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில், இருசக்கர வாகனங்களின் பயன்பாடே கிடையாது. ஆனால், நம் நாட்டின் மக்கள் தொகை, பூகோள ரீதியில் அதிகமாகி, இருசக்கர வாகனங்கள், எண்ணிக்கையின் அடிப்படையில், அதைவிட பல மடங்கு அதிகரித்து விட்டது. வாகனங்களின் எண்ணிக்கைக்கு தகுந்த சாலைகளோ, நகர அமைப்போ இல்லை. ஊராட்சியில் துவங்கி, மாநகராட்சி வரை, எந்த நிர்வாகமும் சாலை பராமரிப்பு செய்வதே கிடையாது. பாதாள சாக்கடை திட்டத்தை, மதுரையில், 1970ல் செயல்படுத்தும் போது, சாலைகளின் இரு பக்கத்திலும் தோண்டி, பல நாட்கள் மூடாமல் அப்படியே கிடக்கும்; சில இடங்களில் வார, மாத கணக்கில் கூட, இந்த பள்ளங்கள் இருக்கும். 45 ஆண்டுகளுக்கு பின்னும், இன்றும் பெரு நகரங்களில் இதே நிலை தான் தொடர்கிறது.அன்று, சாலை போக்குவரத்து துறையில், 'கேங் மஸ்தான்' என்ற சாலை பராமரிப்பு ஊழியர்கள் இருப்பர்; ஊராட்சி மற்றும் நகராட்சியில், எங்காவது சாலை பழுதடைந்தால், உடனடியாக சீர் செய்யும் பணியை இவர்கள் செய்வர். இன்றும், இந்த ஊழியர்கள் இருக்கின்றனர்; ஆனால், மேலதிகாரிகள் இவர்களை வரி வசூல் செய்வதற்கு தான் பயன்படுத்துகின்றனர்.ஒரு டாக்டரான எனக்கு, நெடுஞ்சாலை துறையில் ஏன் இவ்வளவு அக்கறை எனக் கேட்டால், 40 ஆண்டுகளாக, பொது சுகாதாரத் துறையில் பணி செய்கிறேன். பாதுகாப்பான வாழ்க்கைக்கும், அவசர காலத்தில், உயிரை காப்பதற்கும், சாலை பாதுகாப்பு எத்தனை முக்கியம் என்பது, எனக்கு தெரியும்.பிளேக், காலரா போன்ற கொள்ளை நோய்கள் பரவினால் கட்டுப்படுத்த முடியும்; எதிர்பாராமல் சாலை விபத்து ஏற்பட்டால், ஒரு வினாடியில் வாழ்க்கையே மாறிப் போகும். உயிருக்கு போராடுபவரை, மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதும் சவாலான விஷயம். தமிழகம் முழுவதும், சாலைகளில், 'லைசென்ஸ்' இல்லாத விலங்குகள் நிறைய இருக்கின்றன. கடந்த வாரம், சுகாதார ஆய்வாளர் ஒருவர், பணிக்காக, மதுரை ஒத்தக்கடைப் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நாய்கள் குறுக்கே புகுந்து, அவர் தடுமாறி விழுந்ததில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது.நம் அண்டை மாநிலங்களான, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில், விவசாயம், தொழில் துறை வளர்ச்சியில், தொலைநோக்கு திட்டங்கள் செயலில் உள்ளன. வளர்ச்சியில் தொலைநோக்கு திட்டங்கள் இருந்தால் மட்டுமே, சாலை பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார வசதிகள் சாத்தியம். அது, தமிழக அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.டாக்டர்.எஸ்.இளங்கோதமிழ்நாடு பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர், திருச்சி. selango52@gmail.com